கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் அரங்கில் 23-வது பட்டத்தை வென்றுள்ள செரினா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் தனது மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமாக, 1999 - ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா. அதன்பின்னர் 2002, 2008, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.
பாரம்பரியமிக்க விம்பிள்டனில் ஏழு முறை செரினா பட்டம் வென்றிருக்கிறார். 2002, 2003, 2009, 2010,2012, 2015 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து கடந்தாண்டும் விம்பிள்டனில் அவர் மகுடம் சூடினார். 2002, 2013, 2015 -ஆம் ஆண்டுகளில் பிரஞ்ச் ஒபனில் செரினா கோப்பையைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய ஒபனில் தற்போது ஏழாவது முறையாக அவர் சாம்பியன் வென்றுள்ளார். விம்பிள்டனை போன்று ஆஸ்திரேலிய ஓபனிலும் ஏழாவது பட்டத்தை தற்போது வென்றிருக்கிறார். 2003, 2005,2007,2009,2010, 2015 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போதும் ஆஸ்திரேலிய ஓபனில் அவர் சாம்பியனாகியுள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மேலும் 1 பட்டத்தை வென்றால் 24 பட்டங்களை வென்றுள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கிரட் கோர்ட்டின் சாதனையை செரினா சமன் செய்வார்.