தோல்வியால் கண்கலங்கிய வீராங்கனை! ஆறுதல் கூறிய செரீனா!
தோல்வியால் துவண்டு அழும் வீராங்கனையை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய செரீனா வில்லியம்ஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் ஆட்டத்தில் செரீனா வில்லியம்சுக்கும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 18வயதான டயானாவுக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 6-2, 6-1 என்ற கணக்கில் செரீனா எளிதாக வெற்றிபெற்றார். வெற்றிக்கு பிறகு போட்டியாளர்கள் பரஸ்பரமாக கைகுலுக்கு கொள்வது வழக்கம். அப்படி கைகுலுக்கும் போது தோல்வியால் துவண்டு போன டயானா அழுதே விட்டார்.
அப்போது அவரை தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறிய செரீனா, அழாதே! நீ நன்றாக விளையாடினாய்! நீ நல்ல உழைப்பை கொடுத்தாய்! நீ இளம் வீராங்கனை! அழதே! என்றுக்கூறி தேற்றினார். அந்த வீடியோவை ஆஸ்திரேலிய ஓபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கைகுலுக்கும் போது டயானா கண் கலங்குகிறார். அவரை தட்டிக்கொடுக்கும் செரீனா ஆறுதலாக பேசுகிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செரீனா, அவர் தோல்வியால் ஏமாற்றம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். அவர் வெறுமனே விளையாடிவிட்டு சென்றுவிடலாம் என்று வரவில்லை. வெற்றியடைய வேண்டும் என்ற உறுதியுடன் வந்திருக்கிறார். அது தான் என் இதயத்தை உடைத்துவிட்டது. அவரிடம் திறமை உள்ளது. அவரின் அணுகுமுறை எனக்கு பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ் ஆறுதல் கூறும் வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து 'செரீனா மென்மையான மனம் படைத்தவர்' என்று புகழ்ந்து வருகின்றனர்.