ஜீனியஸ் என்பதை மீண்டும் நிரூபித்த தோனி - என்னா ஷார்ப்!
இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி தனது அசாத்தியமான திறமையால் இலங்கை வீரரை அவுட் ஆக்கி ஜீனியஸ் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்தது. 376 ரன்கள் வெற்றி இலக்கு என்பதால் இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வில்லா அதிரடியாக ஆட முற்பட்டார். அதிரடியாக விளையாடிய டிக்வில்லாவை, தனது கூர்மையான கேட்கும் திறமையால் தோனி அவுட் ஆக்கி அசத்தினார்.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை இந்திய அணியின் அறிமுக வீரர் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தை தாக்கூர் வீசிய போது, அது டிக்வில்லாவின் லெக் சைடில் சென்றது. டிக்வில்லா பேட்டை சுழற்றி அடிக்க முற்பட்ட போதும் அது படாமல் சென்றது போல் தெரிந்தது. ஆனால், பந்தை பிடித்த கீப்பர் தோனி உரத்த குரலில் அவுட் கேட்டார். ஆனால், நடுவரோ ஒயிடு கொடுத்துவிட்டார்.
இருப்பினும் தனது நம்பிக்கையை கைவிடாத தோனி, கேப்டன் கோலியிடன் தனக்கு எதோ சத்தம் கேட்டதாக உறுதியுடன் கூறினார். உடனே கோலியும் சிரித்துக் கொண்டே ரிவ்யூ கேட்டார். ஏனென்றால் யாருக்கும் இது அவுட்டாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், ரிவ்யூ முடிவில் பந்து பேட்டில் பட்டு சென்றது தெரியவந்தது. இதனால் நடுவர் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவுட் வழங்கினார்.
தோனியின் கூர்மையான திறனால் சர்வதேச போட்டியில் தாக்கூர் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். இந்த திறமையை பார்த்த ரசிகர்கள் ரிவ்யூ கேட்கும் முறைக்கே தோனியின் பெயரை சூட்டி மகிழ்ந்தனர். அதாவது, ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “Dhoni Review System not, Decision Review System”என்று பதிவிட்டு இருந்தார்.
300-வது போட்டியில் களமிறங்கிய தோனி 100-வது ஸ்டம்பிங் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் ஏதோ ஒரு மாயாஜால வித்தையால் தோனி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துவிடுகிறார்.