என்ன லிவிங் டுகெதரா!! ரொனால்டோவால் அதிர்ச்சியில் சவூதி கால்பந்து ரசிகர்கள்!

என்ன லிவிங் டுகெதரா!! ரொனால்டோவால் அதிர்ச்சியில் சவூதி கால்பந்து ரசிகர்கள்!
என்ன லிவிங் டுகெதரா!! ரொனால்டோவால் அதிர்ச்சியில் சவூதி கால்பந்து ரசிகர்கள்!

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் சவூதி அரேபிய கால்பந்து ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளனர்.

 கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி காலிறுதியில் தோற்றுப் போய் வெளியேறியது.

இதனால், கண்ணீருடன் மைதானத்தைவிட்டு வெளியேறிய ரொனால்டோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அதிர்ஷ்டக்காற்று அவரை அள்ளிச் சென்றது. உலகக்கோப்பை திருவிழா முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே சவூதி அரேபியா அணியில் அங்கம் வகித்தார். கால்பந்து உலகில் கடந்த 20 ஆண்டுகளாக கோலோச்சி வந்த ரொனால்டோவை சவூதி அரேபியாவின் அல்-நாசர் அணி மிகப்பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் வீதம் 2025ஆம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டுகள் அந்த அணிக்காக ரொனால்டோ விளையாட உள்ளார். இதற்கு முக்கியக் காரணம், உலகக்கோப்பையில் சவூதி அரேபியா அணி தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை தோற்கடித்து ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்ததுதான். அர்ஜென்டினாவை சவூதி அரேபியா வென்ற உற்சாக மிகுதியில், அதற்கடுத்த நாளை (2022, நவம்பர் 23) தேசிய விடுமுறை தினமாக மன்னர் சல்மான் அறிவித்தார். 

இந்த வெற்றியை சவூதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரபு உலகமும் கொண்டாடி மகிழ்ந்ததுடன், வீரர்களுக்கும் எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஒரு வெற்றியால்தான் சவூதி அரேபிய அரசு கால்பந்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அந்த வகையில்தான் ரொனால்டோ சவூதி அணிக்கு ரொனால்டோ ஒப்பந்தமாகி உள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், சவூதி அரேபியாவில் ரொனால்டோ தனது காதலியோடு லிவ்-இன் உறவில் இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அதற்கு முக்கியக் காரணம், சவூதி அரேபிய சட்டப்படி திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் ஆகும்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவி-இன் உறவில் வாழ்ந்து வருகின்றனர். சவூதி அரேபிய சட்டப்படி இது தவறு. அந்நாட்டுச் சட்டப்படி, ஒரே வீட்டில் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சட்டவிரோதமானது.

இருப்பினும், ரொனால்டோவும் அவருடைய காதலியும் இதற்காக அதிகாரிகளால் தண்டிக்கப்படப் போவதில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பானிய செய்தி நிறுவனமான இஎஃப்இ, ரொனால்டோ உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் வெளிநாட்டவராகவும் இருப்பதால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், "ரொனால்டோ தனது புகழையும் பிரபலம் என்கிற அந்தஸ்தையும் சவூதியின் ‘விளையாட்டு உத்திக்கான’ கருவியாக மாற்ற அனுமதிக்கக் கூடாது. நாட்டில் உள்ள எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்கு அல் நாசரில் இருக்கும் நேரத்தை அவர் பயன்படுத்த வேண்டும்." என்று அம்னெஸ்டியின் மத்திய கிழக்கு ஆய்வாளர் டானா அகமது கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக இன்று (ஜனவரி 6) முதல் ஆட்டத்தில் விளையாட இருந்த ரொனால்டோவுக்கு, இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய ரசிகர்களில் ஒருவருடைய கைபேசியை ரொனால்டோ தட்டிவிட்டதாகவும், அதற்கு ரொனால்டோ அவரிடம் மன்னிப்பும் கேட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், ரொனால்டோவின் மன்னிப்பை அந்த ரசிகர் ஏற்காததால், இத்தகைய தடையை இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் அல்-நாசர் கிளப்புக்கு பின்னர்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்-நாசர் அணியுடன் இவர் விளையாடும் முதல் போட்டியைக் காண்பதற்காக 28 ஆயிரம் டிக்கெட்கள் வரை விற்பனை ஆகியிருந்தன. ஆனால், இந்தத் தடையால் சவூதி அரேபிய கால்பந்து ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளனர்.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com