சவுதி கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் தீ!
சவுதி அரேபிய கால்பந்துவீரர்கள் சென்ற விமானத்தில் திடீரென்று தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வீதம் மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றான 2-வது சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட் டியில் சவுதி அரேபியாவும் பங்கேற்றுள்ளது.
ரஷ்யாவுடன் நடந்த முதல் போட்டியில் சவுதி, தோல்வியை தழுவியது. இந்த அணி பங்கேற்கும் இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது. அதில் உருகுவே அணியை, சவுதி அரேபியா எதிர்கொள்கிறது. இதற்காகப் போட்டி நடக்கும் ரோஸ்டோவ் நகருக்கு இன்று அதிகாலை விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது நடுவானில் விமானம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக விமானி, சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.