’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்!

’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்!
’உங்க வேலைய மட்டும் பாருங்க’: ராஸ் டெய்லரை விளாசிய பாகிஸ்தான் கேப்டன்!

முகமது ஹபீஸின் பந்துவீச்சை கிண்டல் செய்ததாக, நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது கடுமையாக விளாசினார்.

பாகிஸ்தான் - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி வென்றது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 11 வது முறையாக தொடரை வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்தது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது. முன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ராஸ் டெய்லர் 80 ரன்களும் டாம் லாதம் 68 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகின் ஷா அப்ரிதி, ஷதாப் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47.2 ஓவரில் 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட் டையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 69 ரன்களும் இமாத் வாசிம் 50 ரன்க ளும் எடுத்தனர். நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், 3 விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.


இந்தப் போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ் பந்துவீசினார். அவர் முதல் ஓவரை வீசி முடிக்கும்போது,  பேட்டிங் செய்துகொண்டிருந்த ராஸ் டெய்லர், அவரது பந்துவீச்சு ஆக்‌ஷனை போல செய்து காட்டினார். இதை நடுவருக்கு சொல்வது போலவே, எதிரில் இருந்த நியூசிலாந்து அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான லாதமுக்கு தெரிவிப்பது போல வோ அவர் செய்ய வில்லை என்றாலும், இதனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது கோபமடைந்தார்.

வேகமாக நடுவரிடம் சென்ற அவர், ராஸ் டெய்லரின் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் எப்படி இந்த செயலை செய்யலாம் என்று நீண்ட நேரம் கேட்டுக்கொண்டே இருந்தார். பின்னர் ஹபீஸ், சர்பிராஸ் , ராஸ் டெய்லர் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் நடுவர்கள் சமாதானப்படுத்தினர்.

இதுபற்றி போட்டிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, ‘ராஸ் டெய்லரின் செயலை ஏற்க முடியாது என்றார். 

‘ டெய்லர் சிறந்த தொழில் முறை கிரிக்கெட் வீரர். அவரது வேலை, பேட்டிங் செய்வது மட்டும்தான். அவர் அதில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பந்துவீச்சாளரை அவமதிக்கும் விதமாக அவர் செயல்பட்டது சரியானதல்ல. அது ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரின் செயலும் அல்ல. இரண்டு மூன்று முறை அவர் இப்படி செய்தார். பந்துவீச்சு பற்றி பேசுவது நடுவர்களின் வேலை. ஹபீஸின் பந்துவீச்சில் எந்தப் பிரச்னையும் இல்லை. டெய்லர் தேவையில்லாமல் பிரச்னையை கிளப்புகிறார்’ என்றார். 

ஹபீஸ் சயித்தின் பந்துவீச்சு ஆக்‌ஷன், மூன்று முறை சர்ச்சையானது. 2014 ஆம் ஆண்டும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டும் சர்ச்சையில் சிக்கினார். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் போதும் அவர் பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டார். பின்னர், பந்துவீச்சு முறையை சரிசெய்துகொண்டு அவர் விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று புது சர்ச்சை கிளம்பியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com