"சூர்யா என் இன்ஸ்பிரேஷன்! என் மிகச்சிறந்த நண்பன்"- முதன்முறையாக மனம் திறந்த சர்ஃபராஸ் கான்

"சூர்யா என் இன்ஸ்பிரேஷன்! என் மிகச்சிறந்த நண்பன்"- முதன்முறையாக மனம் திறந்த சர்ஃபராஸ் கான்
"சூர்யா என் இன்ஸ்பிரேஷன்! என் மிகச்சிறந்த நண்பன்"- முதன்முறையாக மனம் திறந்த சர்ஃபராஸ் கான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் சர்ஃபராஸ் கான் பெயர் இடம்பெறாத நிலையில், அதுகுறித்த விவாதம் சமூகவலைதளங்கில் பெரியளவில் கிளம்பியது. அவருக்கு பதில், அப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் தேர்வு பற்றி, சர்ஃபாஸ் காண் தற்போது முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது, சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய தலைமைத்தேர்வு குழு. அணி தேர்வின் பட்டியலில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் மற்றும் ஏற்கனவே அணிக்குள் எடுக்கப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன் முதலிய வீரர்கள் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டிருந்தனர்.

அதற்கு பதிலாக டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் அணிக்குள் எடுக்கப்பட்டிருந்தனர். இதில் தொடர்ந்து 3 ரஞ்சிக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் சர்ஃபராஸ் கானை அணிக்குள் கொண்டுவராதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் இந்திய வீரர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளித்தது.

கிரிக்கெட் ஜாம்பவன்களான கவாஸ்கர்கூட இதுபற்றி பேசியிருந்தார். ஆல்-இந்தியா செலக்‌ஷன் கமிட்டியின் தலைவர் சேத்தன் ஷர்மாவை தாக்கி கவாஸ்கர் பேசியிருந்தார். அவர் பேசுகையில், “சதமடித்துவிட்டு சர்ஃபராஸ் கான், களத்துக்கு வெளியே ஓய்வெடுப்பதில்லை. தொடர்ந்து ஃபீல்டிங் செய்கிறார். இதனால் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டுள்ளார். உங்களுக்கு ஒல்லியான வீரர்கள்தான் வேண்டுமென்றால் ஃபேஷன் ஷோவுக்குச் சென்று மாடல்களைத் தேர்வு செய்யலாம். அவர்கள் கையில் பேட்டையும் பந்தையும் கொடுத்து அணியில் சேர்த்துக்கொள்ளலாம். கிரிக்கெட் வீரர்கள் எல்லாவிதமான உருவங்களிலும் இருப்பார்கள். உருவத்தைக் கொண்டு ஒரு வீரரைத் தேர்வு செய்யாதீர்கள். எடுத்த ரன்கள், விக்கெட்டுகளைக் கவனியுங்கள்” என்று கூறியிருந்தார்.

அதேநேரம், சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யபட்டதற்கு எதிராகவும் இந்திய ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று தற்போது கூறியுள்ளார். இருவருமே இணைந்து மும்பை அணிக்காக பல காலமாக ஒன்றாக விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள சர்ஃபராஸ் கான், “சூர்யா, என்னுடைய மிகச்சிறந்த நண்பர். நாங்கள் ஒரே அணியில் விளையாடியபோது, நிறைய தருணங்கள் சேர்ந்து செலவிட்டிருக்கிறோம். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவர் இந்த இடத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் விளையாடும் விதத்தில் தனது அனுபவத்தை ஒரு பகுதியாக அவர் எடுத்துக்கொண்டார்… அதனால் அவருக்கு எல்லா விஷயங்களும் எளிதானது.

நான் இப்போது கடுமையான பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்திவருகின்றேன். எவ்வளவு கடுமையாக உழைக்க முடியுமோ, அவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டும். அதை மட்டுமே நான் நம்புகிறேன். இதுவரை நான் என்னவெல்லாம் பின்பற்றி வந்தேனோ, அதையே இனியும் தொடர விரும்புகிறேன். நான், மைதானத்தோடு நெருங்கியே இருக்கும் நபர். எப்போதும் நான் பயிற்சியிலேயே இருப்பேன். அதனால்தான் எப்போதும் ஃபார்ம்-லேயே இருக்கிறேன்” என்றுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த வாரம் நடந்த ஒரு பேட்டியில் சர்ஃபராஸ் கான், “இந்திய அணியில் என் பெயர் இல்லாமல் போனபோது, எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. என் இடத்தில் யார் இருந்தாலும் அன்று வருத்தப்படவே செய்திருப்பார்கள். நான் அன்று தேர்வாகிவிடுவேன் என்று நினைத்தேன்… ஆனால் ஆகவில்லை. அன்று முழுவதும் நான் சோகமாகவே இருந்தேன். கவுஹாத்தியிலிருந்து டெல்லிவரை பயணத்திலிருந்த அந்த சமயத்தில், என் எண்ணம் முழுக்க அதில்தான் இருந்தது. ஏன் என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். தனிமையை உணர்ந்தேன். அழக்கூட செய்தேன்” என்று பேசியிருந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com