சஞ்சுசாம்சன் அரைசதம்! ராஜஸ்தான் நிதான ஆட்டம்! கொல்கத்தாவுக்கு எதிராக 153 ரன் இலக்கு
கொல்கத்தாவுக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து 152 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அரைசதம் கடந்தார்.
ஐபிஎல் 2022 சீசனில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தா அணி இன்னும் ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் அபாயத்தில் அந்த அணி களமிறங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ராஜஸ்தானின் ஓப்பனர்களாக ஜோஸ் பட்லரும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். உமேஷ் யாதவ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை பட்லர் துவக்கி வைக்க, 2 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் படிக்கல். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் சூழலை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உமேஷ் வீசிய ஓவரில் தொடர்ந்து பவுண்டரிகளை சாம்சன் விரட்ட, ஸ்கோர் மெல்ல உயரத் துவங்கியது.
பட்லரும் பொறுமையாக விளையாடிய நிலையில், டிம் சவுத்தி வீசிய ஓவரில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கருண் நாயர், சாம்சனுடன் நிலைத்து நின்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏதுவான பந்துகளை மட்டும் சாம்சன் எல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டிருந்தார். ஆனால் கருண் 13 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப ராஜஸ்தான் அணி கொஞ்சம் தடுமாறத் துவங்கியது.
அடுத்து வந்த ரியான் பராக் துவக்கத்திலேயே அதிரடியாக விளையாட, மறுபக்கம் சாம்சன் 38 பந்துகளில் அரைசதம் கடந்தார். சவுத்தி வீசிய ஓவரில் பராக் விக்கெட்டை பறிகொடுக்க, ஷிவம் மாவி ஓவரில் சிக்கி சாம்சனும் அவுட்டாகி வெளியேறினார். மிக முக்கிய டெத் ஓவர்களில் ஹெட்மயர், அஸ்வின் ஆகியோர் கூட்டணி சேர்ந்தனர். ஹெட்மயர் சிக்ஸர்களாக விளாச 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.