சர்ச்சை விமர்சனங்கள்.. வர்ணனையாளர் குழுவிலிருந்து கழட்டிவிடப்பட்டாரா சஞ்சய் மஞ்ச்ரேக்கர்?

சர்ச்சை விமர்சனங்கள்.. வர்ணனையாளர் குழுவிலிருந்து கழட்டிவிடப்பட்டாரா சஞ்சய் மஞ்ச்ரேக்கர்?
சர்ச்சை விமர்சனங்கள்.. வர்ணனையாளர் குழுவிலிருந்து கழட்டிவிடப்பட்டாரா சஞ்சய் மஞ்ச்ரேக்கர்?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளையும் பிசிசிஐ ரத்து செய்தது. இதனையடுத்து மார்ச் 29 ஆம் தேதி தொடங்கப்பட இருந்த ஐபிஎல் போட்டியும் ஏப்ரல் 15 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டிக்கான வர்ணனையாளர்கள் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பெறவில்லை. ஆனால், குழுவில் சுனில் கவாஸ்கர், சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால், அவரின் நடவடிக்கையால் பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.

பிசிசிஐ வர்ணனைக் குழுவில் இருந்து மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்கும் அவர் தேர்வாகமாட்டார் என்றும் கூறப்படுகிறது. சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமர்சனங்களும் சஞ்சய் மீது அதிகமாக எழுந்தன.

அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவைத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததால் ட்விட்டரில் நேரடியாகவே இருவரும் மோதிக்கொண்டனர். அண்மையில் சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவை மட்டம் தட்டிப் பேசியதால் ரசிகர்கள் கடுமையாக அதிருப்தியடைந்தனர்.

இந்தியா - வங்கதேசம் இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் "கிரிக்கெட் விளையாடிய எங்களுக்கு பிங்க் பந்து பற்றிய சந்தேகம் இல்லை" என்று ஹர்ஷா போக்லேவை குத்திக்காட்டி பேசினார். பின்பு மனம் திறந்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் "2019ம் ஆண்டு ஒரு வர்ணனையாளராக எனக்கு மிகவும் மோசமாக அமைந்தது. ஒரு கருத்தினால் நான் நிதானத்தை இழந்து, மோசமாகப் பேசினேன். இதற்காக நான் வருத்தப்படுகிறேன்" என்றார்.

இதுபோன்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர் குழுவில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்காக 1987 இல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 போட்டிகளில் 2043 ரன்களை எடுத்துள்ளார். மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1988 இல் அறிமுகமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 74 போட்டிகளில் 1994 ரன்களை எடுத்துள்ளார், இதில் 1 சதமும் 15 அரை சதமும் அடங்கும். பின்பு, 1996 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்று, வர்ணனையாளராக இருந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com