WPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு மென்ட்டராக நியமிக்கப்படும் சானியா மிர்சா!

WPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு மென்ட்டராக நியமிக்கப்படும் சானியா மிர்சா!
WPL: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணிக்கு மென்ட்டராக நியமிக்கப்படும் சானியா மிர்சா!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வழிகாட்டியாக இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கான இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரான ஐபிஎல் போன்றே, பெண்களுக்கான உள்நாட்டு டி20 தொடரை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ. பெண்களின் கிரிக்கெட் வடிவத்தின் முன்னேற்றத்திற்கு பெரிய உந்துதலாக பார்க்கப்படும், இந்த வுமன்ஸ் பிரீமியர் லீக் டி20 தொடரானது வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதிவரை நடத்தப்பட உள்ளது. WPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என மொத்தம் 5 அணிகள் பங்குபெற்று விளையாடவிருகின்றன.

IPL போன்றே WPL பெண்களுக்கான கிரிக்கெட்டில் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்!- அதிகவிலைக்கு போன வீரர்கள்!

WPL டி20 தொடரின் 5 அணிகளுக்கான வீராங்கனைகளின் ஏலமானது கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி நடத்தப்பட்டு, வீராங்கனைகளைகள் ஒவ்வொருவரும் அதிக விலைகளுக்கு போட்டிப்போட்டு வாங்கப்பட்டனர். அதிக விலைக்கு சென்றவராக இந்தியாவின் நட்சத்திர ஓபனிங் வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா இருந்தார். அவர் ரூ. 3.4 கோடி ஏலத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து ரூ. 3.2 கோடிகளுக்கு இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர், ஆஸ்திரேலியாவின் அஸ்லெய் காத்ரின் இருவரும் உபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளால் வாங்கப்பட்டனர். மேலும் இந்தியாவின் தீப்தி சர்மா ரூ. 2.6 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணிக்கும், ரேனுகா சிங் ரூ. 1.5 கோடிக்கு ராயல் சேலஞ்ச்ரஸ் அணிக்கும் சென்றுள்ளனர்.

கோப்பையை கைப்பற்றும் வகையில் பயிற்சியாளர்களை அறிவித்த RCB! - மென்டர்ராக நியமிக்கப்பட்ட சானியா!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது ஏலத்தில் ஸ்மிருதி மந்தனா, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், சோஃபி டிவைன், டேன் வான் நீகெர்க், ரிச்சா கோஷ் மற்றும் ரேனுகா சிங் ஆகிய வீரர்களை ஏலத்தில் எடுத்து வலுவான அணியாக தெரிகிறது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம், அவர்களின் பயிற்சியாளர்கள் மற்றும் வழிகாட்டியை அறிவித்துள்ளது. அதன்படி ஆர்சிபி அணியின் வழிகாட்டியாக இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பென் சாயரை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பென் சாயர் நியூசிலாந்து பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி மகளிர் உலகக் கோப்பை வென்றபோது உதவி பயிற்சியாளராக இருந்துள்ளார்.

மேலும் முன்னாள் தமிழ்நாடு ஆஃப் ஸ்பின்னரான மலோலன் ரங்கராஜன், இந்த அணிக்கு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான VR வனிதா பீல்டிங் பயிற்சியாளராகவும், பெங்களூரை சேர்ந்த RX முரளி பவர்-ஹிட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். RX முரளி மயங்க் அகரவால் உள்ளிட்ட பல கர்நாடக வீரர்களுக்கு முக்கியமான நேரங்களில் பயிற்சியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் 20 ஆண்டுகால அனுபவம் அவர்களுக்கு உந்துதலாக இருக்கும்-சானியா மிர்சா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மென்டர்ராக நியமிக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் சானியா மிர்சா, “வழிகாட்டியாக நான் நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டானது பெண்களின் எதிர்கால கரியருக்கான தேர்வுகளில் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதை, நான் நம்ப வைக்க விரும்புகிறேன். மேலும் அடுத்த தலைமுறையினரான அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், `உங்களின் இலக்கிற்கு எதிராக எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், அதை தாண்டி உங்களால் இலக்கை நிச்சயம் அடைய முடியும். இந்த ஒரு நம்பிக்கையை மட்டும் உங்களிடம் ஏற்படுத்த விரும்புகிறேன்' ” என்று கூறியுள்ளார்.

மேலும், “20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடிய என் அனுபவங்களை கொண்டு, இளம் வீராங்கனைகளுக்கு மன உறுதியையும், மன நம்பிக்கையையும் கொண்டு வர முடியும் என்று உணர்கிறேன். இந்தியாவிற்காக விளையாட்டு உலகில் இத்தனை ஆண்டுகளாக ஒரே இந்திய பெண்ணாக இருப்பது, எனக்கு தனிமையை ஏற்படுத்தியிருந்தது, நிறைய மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது பற்றிய விஷயங்கள் எல்லாம், உண்மையிலேயே அவர்களுக்கு என்னால் உதவக்கூடிய ஒன்று" என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா டென்னிஸ் உலகில், மகளிர் இரட்டையர் பிரிவில் 3, கலப்பு இரட்டையர் பிரிவில் 3 என 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்றப் பெருமையையும் அவரையே சேரும். மேலும், இரட்டையர் பிரிவில் உலகளவில் நம்பர் 1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். அத்துடன் 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றவர் என்ற பெருமையையும் அவரையே சேரும். இந்நிலையில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள சானியா மிர்சா, தற்போது துபாயில் நடைபெற்றுவரும் ATP துபாய் ஓபன் டென்னிஸ் தொடருக்கு பிறகு ஆர்சிபி அணியில் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com