கோலியின் அதிரடி வீண் - பெங்களூர் அணிக்கு 2வது தோல்வி
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 217 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரஹானே (36), பென் ஸ்டோக்ஸ்(27), பட்லர்(23) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூர் அணி விளையாடியது.
பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம் 4 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் விராத் கோலி அதிரடியாக விளையாடினார். டீ காக் 26 ரன்கள் எடுத்தபோது, ஷார்ட் பந்துவீச்சியில் வெளியேற, டிவில்லியர்ஸ்ம் 20 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள், ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
கோலி 30 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 198 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பெங்களூர் அணி சார்பில் மந்தீப் சிங் 25 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. பெங்களூர் அணிக்கு இது இரண்டாவது தோல்வி.