உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்தை உறுதி செய்த சிந்து, சாய்னா
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவாலும், பி.வி. சிந்துவும் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 6வது இடத்திலுள்ள சீன வீராங்கனை சுன் யு-வை 14 - 21, 9 - 21 என்ற புள்ளி கணக்கில் சிந்து வீழ்த்தினார். இதனையடுத்து தரவரிசையில் 10வது இடத்திலுள்ள மற்றொரு சீன வீராங்கனை சென் யுஃபை-யை அரையிறுதியில் சிந்து எதிர்கொள்வார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 16வது இடத்திலுள்ள கிறிஸ்டி கில்மரை 21-19, 18-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் சாய்னா நேவால் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம், சாய்னா, சிந்து இருவரும் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தனர். எனினும், இன்று நடைபெறும் அரையிறுதியில் எதிர்த்து போட்டியிடும் வீராங்கனைகளை இருவரும் வெற்றி கொண்டால், இறுதிப் போட்டியில் சாய்னாவும், சிந்துவும் சந்திக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அது நேர்ந்தால், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவர் அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். முன்னதாக ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வியுற்றார்.

