9 வயதில் முளைத்த பளு தூக்கும் கனவு: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் மீராபாய் சானு!

9 வயதில் முளைத்த பளு தூக்கும் கனவு: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் மீராபாய் சானு!

9 வயதில் முளைத்த பளு தூக்கும் கனவு: ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் மீராபாய் சானு!
Published on

வரும் 23ஆம் தேதி அன்று ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஆரம்பமாக உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் 26 வயதான சாய்கோம் மீராபாய் சானு 49 கிலோ எடை பிரிவில் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தியா சார்பில் பளு தூக்கும் பிரிவில் பங்கேற்கும் ஒரே விளையாட்டு வீராங்கனை மீராபாய் மட்டும்தான். 

யார் இவர்?

இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவின் சொந்த மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின்  இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் தான் (Nongpok Kakching) மீராபாய் சானு பிறந்து, வளர்ந்த கிராமம். நிரந்தர வேலை இல்லாமல் கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளனர் அவரது பெற்றோர். அதே கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியில் ஆரம்ப கல்வியை படித்துள்ளார் சானு.

டிவி பார்த்து பளு தூக்குதல் விளையாட்டில் வந்த ஆர்வம்!

'அப்போது அவளுக்கு ஒன்பது வயதிருக்கும். நான்காம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். விடுமுறை நாளான அந்த சனிக்கிழமை அன்று டிவியில் ஸ்போர்ட்ஸ் சேனலை பார்த்து கொண்டிருந்தாள். அதில் குஞ்சரணி தேவி பளு தூக்குதலில் 2004 ஒலிம்பிக்கில் அசத்திக் கொண்டிருந்தார். அதை பார்த்து தான் என் மகளுக்கு பளு தூக்குதலில் ஆர்வம் வந்தது" என்கிறார் மீராபாய் சானுவின் தாயார். 

“அந்த போட்டி முடிந்தவுடன் இந்தியாவிற்கு நான் பளு தூக்குதலில் பதக்கம் வென்று தருவேன் என்ற ஆர்வத்தோடு வீட்டு வாசலில் கிடந்த நீளமான மூங்கில் கோளை தலைக்கு மேல் தூக்கி விளையாடினாள் என்கிறார் அவர். 

தன் கிராமத்தில் செயல்பட்டு வந்த இளைஞர் மன்றத்திற்கு சென்று உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். கூடுதல் பயிற்சிக்காக தங்கள் கிராமத்திற்கு பக்கத்தில் இருந்த பளு தூக்கும் பயிற்சி மையத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் மீராபாய். 

விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் தங்கள் ஸ்டாமினாவை அதிகரிக்க பழம், பால், சத்து மாவு முதலியவற்றை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் வறுமையால் மீராபாய் பால் கூட வாங்கி பருக முடியாத சூழல். ஆனால் பயிற்சியாளரிடம் அதை கூட மறைத்துள்ளார் அவர்.  

வட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தனது முத்திரையை பதித்தார். 2013ல் ஜுனியர் பிரிவில் நாட்டின் சிறந்த வெயிட் லிப்டர் என்ற பட்டத்தை வென்றார் மீராபாய். 

பட்டியாலாவில் பயிற்சி மேற்கொள்ள மறுத்த பெற்றோர்!

பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு கழகத்தில் தங்கி பயிற்சி பெரும் வாய்ப்பை பெற்றார் மீராபாய். அதற்கு அவரது பெற்றோர் நோ சொல்ல '2016 ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் நான் பங்கு பெறுவேன். அந்த வாய்ப்பை இழந்தால் வீட்டுக்கே திரும்பி விடுகிறேன்' என சபதம் போட்டுவிட்டு மூட்டை முடிச்சுகளோடு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். 

அங்கு தன்னுடைய குஞ்சரணி தேவிதான் அவருக்கு பயிற்சியாளர். அதன் மூலம் தேசிய போட்டிகளில் அசத்தி 2014 ல் நடந்த காமன் வெல்த் போட்டிகளில் பங்குபெற வாய்ப்பு பெற்றார். அதில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றிருந்தார் மீராபாய். அந்த வெற்றியின் மூலமாக 2016இல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அதில் 48 கிலோ எடைப்பிரிவில் ஆறாது இடம் பிடித்தார். 

2017 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்!

அமெரிக்காவில் நடந்த 2017 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் 194 கிலோவை அசால்டாக தூக்கி நிறுத்தி தங்கத்தை வென்றார் மீராபாய். 

"இந்த வெற்றியை நான் பெற்றுள்ளது எனக்குள் புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. ஒரு கிளாஸ் பால் வாங்கி குடிக்கவே முடியாத குடும்பத்தை சேர்ந்த நான் இன்று இந்தியாவிற்கே பெருமையையும், கவுரவத்தையும் உலக அரங்கில் பெற்றுத் தந்திருப்பது மகிழ்ச்சி. அதன் மூலமாக விளிம்பு நிலையில் இருக்கின்ற பெண் குழந்தைகளும் திறமையும், தகுதியும் இருந்தால் விளையாட்டில் அசத்தலாம் என நம்புகிறேன். டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது எனது அடுத்த இலக்கு" என கூலாக அப்போது சொல்லியிருந்தார் மீராபாய். 

2020இல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 49 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். எப்படியும் இந்த முறை அவர் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வாழ்த்துக்கள் மீராபாய்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com