10ம் எண் ஜெர்ஸியில் குட்டி குழந்தை: சச்சின் பகிர்ந்த க்யூட்டான புகைப்படங்கள்..!
சச்சினின் ஜெர்சி, அவரைப் போலவே ஹேர்ஸ்டைல் கொண்ட 10 மாதக் குழந்தையை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பல ஆண்டுகள் ஆன போதிலும் இன்றுவரை தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தையே தக்க வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவருடைய சாதனைகள் பல இன்றுவரை முறியடிக்கப்படாமலே இருந்து வருகிறது. மும்பை அணிக்காக அவர் விளையாடிய காரணத்திற்காகவே அவரது ரசிகர்கள் அந்த அணியை தாங்கிப் பிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ட்விட்டரில் ஆனந்த் என்பவர் சச்சினை டேக் செய்து ஒரு பதிவொன்றை போட்டிருந்தார். அதில் " சச்சின் சார் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றாலும், எங்கள் இதயத்திலிருந்து எப்போதும் ஓய்வுப் பெறமாட்டீர்கள். உங்களுக்காக எங்களது ஒரு சிறிய காணிக்கை. என்னுடைய அக்கா மகன் 10 மாதக் குழந்தை ஷ்ரெஷ்ட் மேத்தா. அவன் எங்களுடைய லிட்டில் மாஸ்டர் பிளாஸ்டர்" என பதிவிட்டு கிரிக்கெட் விளையாடும் 10 குழந்தையின் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். மேலும், இந்தப் பதிவை பார்க்கும் வரை நண்பர்கள் இதனை ஷேர் செய்யவும் என கோரியிருந்தார் ஆனந்த்.
இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் தனது பக்கத்தில் "கிரிக்கெட்டுக்கு வயது ஒரு பொருட்டல்ல. அழகான புகைப்படங்களை பகிர்ந்ததற்கு நன்றி. 10 மாதக் குழந்தை ஷ்ரெஷ்ட்டுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள்" என பதிவிட்டிருந்தார். இப்போது இந்த அழகான குழந்தையின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.