"நீங்கள் ஈடு இணையற்றவர் அம்மா" - உருகிய சச்சின் டெண்டுல்கர் !
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தினமான இன்று சிறப்புப் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய அம்மாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இன்று அன்னையர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பல பிரபலங்களும் தங்களது தாயாருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை சமூக வலைத்தளம் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல சச்சின் டெண்டுல்கரும் தனது அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சச்சின் தன் தாயாரான ரஜினியை எப்போதும் மதிப்பவர். எத்தனையோ நூறு போட்டிகளை சச்சின் விளையாடினாலும் அவரது தாயார் நேரில் வந்து பார்த்ததில்லை.
ஆனால், சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போகும் கடைசிப் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார் அவரது தாயார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிரியா விடையைக் கண்ணீரோடு கொடுத்து வெளியேறும்போது, அவரது தாயாரும் கண்கலங்கினார். இப்போதும் சச்சின் ரசிகர்களுக்கு இந்த அற்புதமாகக் காட்சி நெஞ்சில் நிழலாடும். கடந்த மாதம் கூட தன்னுடைய பிறந்தநாளை தன் தாயின் ஆசீர்வாதத்துடன் தொடங்கினார் சச்சின்.
அண்மையில் கூட ஊரடங்கு காலம் குறித்துப் பேட்டியளித்த சச்சின் "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்போதுதான் என் அம்மாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறேன்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் அன்னையர் தினத்தில் ஸ்பெஷலான புகைப்படத்துடன் ட்விட்டரில் "நீங்கள்தான் எனக்கும் எல்லாமுமாக இருக்கிறீர்கள், நீங்கள் எப்போதும் அற்புதமானவர் , ஈடிணையற்றவர். நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.