விளையாட்டு
தந்தையாக தன் மகனுக்கு முடிவெட்டி விட்ட சச்சின் - வைரல் வீடியோ
தந்தையாக தன் மகனுக்கு முடிவெட்டி விட்ட சச்சின் - வைரல் வீடியோ
ஒரு தந்தையாகத் தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் முடி வெட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்ட பிறகு இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகத் தீவிரமாக இயக்கி வருகிறார். சமீபத்தில் சவுரவ் கங்குலியின் வீட்டில் விருந்து உண்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்த சச்சின், அந்தப் பதிவில் கங்குலியின் தாயாரை நலம் விசாரித்திருந்தார்.

இந்நிலையில் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரராகத் தனது பதிவுகளை வெளியிட்டு வந்த சச்சின், இப்போது ஒரு தந்தையாக உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் தனக்குத் தானே முடி வெட்டிக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஊரடங்கு காலத்தின் சங்கடங்களை வெளிப்படுத்தியிருந்த இவர், ஒரு தந்தையாக அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முடிதிருத்தும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் இப்போது வெளியிட்டுள்ளார்.

அதில் பேட்டிங் மேஸ்ட்ரோ சச்சின் தனது 20 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் தலைமுடியை மிக நேர்த்தியாக வெட்டி விட்டுள்ளார். அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து கொண்டுள்ளார். இதனைப் பகிர்ந்த சச்சின், தனது உதவியாளராக பணியாற்றிய தனது மகள் சாராவுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் அந்தப் பதிவில் சச்சின், “ஒரு தந்தையாக நீங்கள், உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களுடன் ஜிம்மிங் செய்வது அல்லது அவர்களின் தலைமுடியை வெட்டுவது என அனைத்தையும் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நீங்கள் எப்போதும் அழகாக இருப்பீர்கள் அர்ஜூன்” எனக் கூறியுள்ளார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல நகரங்களில் இன்னும் முடித்திருந்தும் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.