தோனியை கேப்டனாக பரிந்துரைக்க காரணம் என்ன ? சச்சின் டெண்டுல்கர் விளக்கம்
மகேந்திர சிங் தோனியை இந்திய அணிக்கு கேப்டனாக்குமாறு பிசிசிஐயிடம் பரிந்துரை செய்ய என்ன காரணம் என்பதை இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பல இந்நாள் முன்னாள் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். 2007, டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தோனியை கேப்டனாக்குமாறு அப்போது சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐக்கு யோசனை சொன்னார். அதன்படி 2007 டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தோனி கேப்டனானார். இந்தியாவும் கோப்பையை வென்றது.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள சச்சின் டெண்டுல்கர், அப்போது தோனியை கேப்டனாக பரிந்துரை செய்ய காரணம் என்ன என்பதை கூறியுள்ளார் அதில் "டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் பொசிஷனில் பீல்டிங் செய்வேன், அப்போது தோனியுடன் உரையாற்றும் வாய்ப்பு அதிகம். அப்போதுதான் அவரைப் பற்றி அவரின் சிந்தனை குறித்து என்னால் அறிய முடிந்தது. ஒரு போட்டி எவ்வாறு செல்லும் எப்படி முடியும் என அறியும் ஆற்றல் தோனிக்கு அபாரமாக இருந்தது. இதையெல்லாம் வைத்துதான் பிசிசிஐக்கு தோனியை கேப்டனாக்குமாறு பரிந்துரை செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
2007 உலகக் கோப்பை அணிக்கு வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோரின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.