இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும்: சச்சின் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி தோல்வியடைந்துள்ளது; தொடரை இழக்கவில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
புனேவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து விராத் கோலி தலைமையிலான இந்திய அணிக்கெதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தநிலையில், ஒரு போட்டியில் தோல்வியடைந்து விட்டோம் என்பதால், இந்திய அணி போராடாது என்று எண்ணிவிட வேண்டாம் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த மராத்தான் போட்டியைத் துவங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். கடினமான சூழலை சமாளித்து விளையாடும் திறன் இந்திய அணிக்கு உண்டு என்பதை நான் அறிவேன். நிச்சயமாக தோல்வியிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்றும் சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.