"நடராஜனின் ஆட்டம் சிறப்பு... டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது, நிர்வாகம் கையில்!" - சச்சின்

"நடராஜனின் ஆட்டம் சிறப்பு... டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது, நிர்வாகம் கையில்!" - சச்சின்
"நடராஜனின் ஆட்டம் சிறப்பு... டெஸ்ட் தொடரில் இடம்பெறுவது, நிர்வாகம் கையில்!" - சச்சின்


நடராஜனின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டிய சச்சின் டெண்டுல்கர், அவர் டெஸ்ட் அணியிலும் இடம்பெறுவது குறித்து அணி நிர்வாகம்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அதற்கு பிறகு குழந்தை பிறப்பு காரணமாக இந்தியா திரும்புகிறார். அடுத்த 3 போட்டிகளுக்கு ரோகித் சர்மா அல்லது ரஹானே ஆகியோர் கேப்டனாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே கேப்டன் விராட் கோலி விளையாட இருக்கிறாா். அதன் பிறகு அவா் இந்தியா திரும்புகிறாா். கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிா்கொள்ள அணி பழகிக் கொள்ளவேண்டும்" என்றார்.

மேலும் அவர் "முன்பு, அனில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக அவா் திடீரென விலக நேரிட்டது. அப்போது அவா் அணியின் முன்னணி பந்துவீச்சாளராகவும் இருந்தாா். அப்போது, இந்திய அணி நிலைமையை சமாளித்து விளாயாடியது. கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததை இளம் வீரா்களுக்கான வாய்ப்பாகவும் பாா்க்க வேண்டும்" என்றார் சச்சின்.

இஷாந்த் சர்மாவின் உடல் தகுதி கேள்விக்குறியானால், நடராஜனை டெஸ்ட் தொடரிலும் சேர்ப்பது குறித்து கேட்டதற்கு, "நடராஜனைப் பொறுத்தவரையில், அவர் களமிறங்கிய போட்டிகள் அனைத்திலும் சிறப்பாக விளையாடினார். ஒரு வீரரை களமிறக்குவதற்கோ அல்லது மாற்று வீரரைத் தேர்ந்தெடுப்பதோ தேர்வுக்குழு - அணி நிர்வாகத்தின் பணி. அவர்கள்தான் சரியான முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். இத்தகைய முடிவுகளில் தாக்கத்தை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com