தந்தையர் தினம் - சச்சின் உள்ளிட்ட வீரர்களின் நினைவலைகள்
தந்தையர் தினத்தை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் தந்தையின் நினைவலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், ரவிசாஸ்த்ரி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஹர்த்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதலில் ஒரு நல்ல மனிதராக இருக்க முயற்சி செய்யுங்கள்" என்ற உங்கள் விலைமதிப்பற்ற ஆலோசனையை நான் எப்போதும் நினைவில் கொள்வேன். எல்லாவற்றிற்கும் நன்றி "எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
ஹர்த்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நேரம் எப்படி வேகமாகச் செல்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாறாமல் இருக்கும் ஒன்று உங்கள் தந்தையின் அன்பும் ஆதரவும் ஆகும். எங்களுக்காக நீங்கள் செய்த அனைத்து தியாகங்களுக்கும் நன்றி அப்பா. நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். உங்கள் முகம் புன்னகையுடன் இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்வேன். இனிய தந்தையர் தின வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரும் அவரது சகோதரர் குர்னல் பாண்ட்யாவும் அவரது தந்தையுடன் சிறுவயதிலும் தற்போதும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்த்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது முதல் ஹீரோ. எனது முதல் இன்ஸ்பிரேஷன். எனது தந்தை” எனக்கூறி அவரது தந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், “தந்தை என்பவர் குழந்தை மற்றும் குடும்பத்தின் முதுகெலும்பாகத் துணை நிற்பவர். என் தந்தையும் அவ்வாறே செய்தார். என் கனவுகள் அனைத்தையும் அடைய எனக்கு ஆதரவளித்தார். அதைத்தான் நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். அதை என் குழந்தைகளுக்கும் கொடுக்கிறேன். தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா” எனத் தெரிவித்துள்ளார்.
யூசுப் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்பாவுடன் அயான் மற்றும் ரியான். இத்தகைய அக்கறையுள்ள, அற்புதமான தந்தையைப் பெறுவது எனக்கு அதிர்ஷ்டம். இந்தப் படம் இந்தத்தந்தையர் தினத்தை எனக்கு மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது. இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.