கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் உகான் நகரில் துவங்கிய அதன் கோரத் தாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. இத்தாலியிலும் பெரிய அளவில் பாதிப்பு காணப்படுகிறது.தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
இது குறித்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன. சில சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களும் பொது சிந்தனையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருக்கிறார்.
அதில் பேசியிருக்கும் சச்சின் “இங்கு கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. நாம் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது விழாக்களில் கலந்து கொள்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.” என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் “சிறிய காய்ச்சல், தும்மல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் கூட உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்” என்று கூறும் அவர் அதற்கான உதவி எண்ணான 1075’ஐ குறிப்பிட்டும் பேசி இருக்கிறார்.
கொரோனா குறித்து அறிந்து கொள்வதற்கான அரசாங்க இணையதளம் மற்றும் உதவி எண்களை குறிப்பிட்டு சச்சின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். தற்போது சச்சினின் அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.