"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிச் சென்றிருக்கக் கூடாது" - இன்சமாம் உல் ஹக் !

"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிச் சென்றிருக்கக் கூடாது" - இன்சமாம் உல் ஹக் !
"சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிச் சென்றிருக்கக் கூடாது"  - இன்சமாம் உல் ஹக் !

கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வுபெற்றது அவருடைய விருப்பம், ஆனால் அவர் தொடர்ந்து விளையாடி இருக்கலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இன்சமாம். 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் குவாலியர் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித்து சாதனைப்படைத்தார் சச்சின். அந்த வரலாற்று சாதனை நிறைவடைந்து 10 ஆண்டுகள் ஆனதையொட்டி இன்சமாம் உல் ஹக்கிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

அப்போது பேசிய அவர் "சச்சின் கிரிக்கெட்டுக்காகவே பிறந்தவர். நான் எப்போதும் கிரிக்கெட்டை நம்புகிறேன். கிரிக்கெட்டையும் சச்சினையும் பிரிக்க முடியாது. சச்சின் 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அப்போது உலகளவில் மிரட்டும் பவுலர்கள் இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் சிறிய வயதில் அவர் பவுலர்களை எதிர்கொண்ட விதம் இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. எனவேதான் அவர் அசாதாரண கிரிக்கெட் வீரராக அறியப்படுகிறார்” என்றார்.

சச்சினின் உலக சாதனைகள் குறித்து பேசிய இன்சமாம் " சச்சினின் சாதனைகள் அபாரமானவை. சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களே 10 ஆயிரம் ரன்களுடன் ஓய்வுப் பெற்றுவிட்டனர். ஆனால் சச்சின் டெண்டுல்கரோ 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் அவரின் இமாலய சாதனைகளை உடைக்கப்போகும் வீரர் யார் என்பதை அறிய ஆர்வமாக காத்திருக்கிறேன். மேலும் சச்சினின் மனோ பலம் எனக்கு எப்போதும் அதிசயமானது. அவர் ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய வரும்போதும் பெருஞ்சுமையை சுமந்து வருவார். அதனை அவர் கடந்து விளையாடிய விதம் அலாதியானது" என்றார்.

சச்சினின் பவுலிங்கையும் புகழ்ந்துள்ள இன்சமாம் " சச்சின் ஒரு ஜீனியஸ். அவரால் லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின், மீடியம் பேஸ் பந்துவீச்சை சிறப்பாக செய்ய முடிந்தது. நான் என் வாழ்நாளில் மிகப் பெரிய சுழற்பந்துவீச்சாளர்களை சந்தித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் சச்சினின் கூக்லி பந்து வீச்சில் பலமுறை ஆட்டமிழந்து இருக்கிறேன். இப்போதைக்கு சச்சின் போன்ற வீரரை நான் பார்க்கவில்லை, வேண்டுமானால் எதிர்காலத்தில் சச்சினின் சாதனைகள் முறியடிக்கப்படலாம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com