"98ல நடந்ததா சொல்றாங்க சார்" சென்னையில் நடந்த ஷேன் வார்ன் Vs சச்சின்-ஒரு சுவாரஸ்ய பின்னணி

"98ல நடந்ததா சொல்றாங்க சார்" சென்னையில் நடந்த ஷேன் வார்ன் Vs சச்சின்-ஒரு சுவாரஸ்ய பின்னணி
"98ல நடந்ததா சொல்றாங்க சார்" சென்னையில் நடந்த ஷேன் வார்ன் Vs சச்சின்-ஒரு சுவாரஸ்ய பின்னணி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்ற அணிகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனம்தான். அப்படிப்பட்ட அணியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே இருந்தால் எப்படி இருக்கும்? 1990 ஆம் காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே. அப்படிப்பட்ட ஷேன் வார்னே 1998 இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருகிறார், அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது என்ற செய்தி பரவியதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அப்போது இந்திய ஊடகங்கள் எழுதின இது சச்சினுக்கும் ஷேன் வார்னேவுக்குமான தொடர் என்று.

"உங்களுக்கு எப்படி ஷேன் வார்னேவா, எங்களுக்கு சச்சின்" என்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வார்னேவை எதிர்கொண்ட சச்சின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசுவார். ஆனால் அதே ஓவரில் சச்சினின் விக்கெட்டை சாய்ப்பார் வார்னே. இது நடந்தது சென்னையில். ஒட்டுமொத்த மைதானமும் அமைதியானது. ஆனால் அதே வார்னேவின் சுழலை, இரண்டாவது இன்னிங்ஸில் விளாசியிருப்பார் சச்சின். அந்தத் தொடரில் 2 சதங்களும் ஒரு அரைசதம் உள்பட சச்சின் 446 ரன்கள் குவித்திருப்பார். அவரது சராசரி 111.50 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 80.65 ஆகவும் இருந்தது.   

ஒரு மிகப்பெரிய சுழல் மன்னனை நாம் எதிர்கொாள்ளப் போகிறோம் அதற்கு நாம் தயாராக வேண்டும் என்ற எண்ணமும் உழைப்புமே சச்சினின் அடையாளம் என்றாலும் கூட சச்சினை "ஹோம் வொர்க்"  செய்ய வைத்தது ஷேன் வார்னேவின் பெருமை.

எப்படி தயாரானார் சச்சின்? 

சச்சின் ஒருமுறை BCCI உடனான உரையாடலில், க்ளென் மெக்ராத், டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கெல் ஆகியோரை எதிர்கொண்டதைப்பற்றி ஒருமுறை பேசினார். அப்போது ஷேன் வார்னே குறித்து சச்சின் பேசும்போது உலகத்தரம் வாய்ந்த ஆஸ்திரேலியா பவுலர் ஷேன் வார்ன் என குறிப்பிட்டு, 'ஷேன் வார்னின் ஒவ்வொரு பந்தும் விக்கெட்டை குறிவைத்தே வீசப்படும். அது அவருடைய ஆயுதம்' என்றார்.

''என்னால் வார்ன் உடனான அந்தப் போட்டியை எப்போதும் மறக்கவே முடியாது. 1998ல் அது நடந்தது.பவுலர் எதிர்மறையாக பந்து வீச விரும்பினால், பந்து வீச்சாளர் டாட் பந்துகளை வீசுவார். ஆனால் வார்னே உண்மையில் விக்கெட்டுகளை எடுப்பதற்காக பந்துவீசினார். அதனால் அதுவே அவரது ஆயுதங்களில் ஒன்றாக இருந்தது. மும்பையில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இரட்டை சதமடித்த அந்த ஆட்டத்தில் ஷேன் வார்ன் ஒரு பந்தை கூட அரவுண்ட் தி விக்கெட் வீசவில்லை.

நெருக்கடியான தருணத்தில் அவர் அரவுண்ட் தி விக்கெட் வருவார் என்று நான் கூறினேன். இரண்டாவது இன்னிங்ஸில் நெருக்கடியான தருணத்தில் அவர் அரவுண்ட் தி விக்கெட் பந்தை வீசினார். அதற்காக நான் ஒருவித பயிற்சி செய்தேன். ஏனென்றால், உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக, நீங்கள் விளையாடும்போது, மனதில் தோன்றுவதை வைத்து தன்னிச்சையாக விளையாட முடியாது. அவரை எதிர்கொள்ள நான் கடுமையாக பயிற்சி செய்தேன்'' என்றார்.

மற்றொரு பேட்டியில், ''அவர் இந்தியா வந்தபோது நான் சுழல்பந்து வீச்சுக்கு என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஷேன் வார்னை சமாளிக்க லட்சுமண் சிவராமகிருஷ்ணனுடன் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டேன். மும்பையில் நிலேஷ் குல்கர்னி, ராஜேஷ் பவார், சாய்ராஜ் பாஹுலே ஆகியோருடன் பயிற்சி செய்தேன். இது எனக்கு மிகவும் நல்ல முறையில் பயன் கொடுத்தது'' என்றார். 1998 இந்திய சுற்றுப்பயணம் குறித்து பேசிய ஷேன் வார்ன், 'சச்சின் என் கனவில் வந்து, அங்கேயும் என் பந்துகளில் சிக்ஸர் அடித்தார்' என விளையாட்டாக கூறினார்.

இதேபோல ஷேன்வார்ன் தான் எழுதிய 'நோ ஸ்பீன்' புத்தகத்தில், தனக்கு கடும் போட்டியாளராக சச்சினும், பிரெயின் லாராவும் இருந்ததை எந்தவித தயக்கமும் இல்லாமல் குறிப்பிட்டிருப்பார். ''டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு சதம் தேவைப்படுகிறது என்றால் அந்த வேலையை செய்து முடிக்க கண்ணை மூடிக்கொண்டு நான் பிரையன் லாராவை தேர்வு செய்வேன்.ஆனால், எனது வாழ்நாள் முழுவதும் ஒரு பேட்ஸ்மேனின் பேட்டிங்கை இரவு பகலாக பார்க்க வேண்டுமென்றால், அதற்கு சச்சின் டெண்டுல்கரை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது'' என்று அதில் எழுதியிருப்பார் ஷேன்வார்ன்.

வி மிஸ் யூ ஷேன்வார்ன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com