விளாசினார் வில்லியர்ஸ்: தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ்-சின் அபார செஞ்சுரி காரணமாக தென்னாப்பிரிக்க அணி 104 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது விளையாடி வருகிறது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி, பார்ல் பகுதியில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ், பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் அம்லா 85 ரன்கள் எடுத்தார். நான்காவது வீரராக களமிறங்கிய டிவில்லியர்ஸ் அதிரடியாக ஆடினார். பங்களாதேஷ் பந்துவீச்சை சின்னாபின்னமாக்கிய அவர், 104 பந்துகளில் 176 ரன்கள் குவித்தார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 353 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பங்களாதேஷின் இம்ருல் கேயஸ் 68 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 47.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி, அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

