தடைகளை கடந்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண் ஜாக்கி ரூபா சிங்..!

தடைகளை கடந்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண் ஜாக்கி ரூபா சிங்..!

தடைகளை கடந்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண் ஜாக்கி ரூபா சிங்..!
Published on

இந்தியாவை சேர்ந்த பெண்கள் பல துறைகளிலும் தடம் பதித்து சாதித்து வருகின்றனர். குறிப்பாக கிரிக்கெட், தடகளம், மல்யுத்தம், பேட்மிண்டன் என சர்வதேச விளையாட்டு களத்தில் இந்திய வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் உள்ள வீராங்கனைகளில் ஒருவர் தான் ரூபா சிங். இந்தியாவின் முதல் பெண் ஜாக்கி. 

இந்தியாவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி விளையாடி வந்த குதிரையேற்றத்தில் பெண்களும் இந்த விளையாட்டை விளையாடலாம் என தனக்கு முன்னாள் இருந்த தடைகளை தகர்த்தெறிந்த 'புரவி புயல்' ரூபா.

ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ரூபா சிங். சென்னையில் வளர்ந்தவர். அவரது தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தினரின் குதிரைகளை பராமரிக்கும் பணியை கவனித்து வந்துள்ளார். ஒய்வு நேரங்களில் தாத்தாவோடு சென்று குதிரைகளை பார்த்து, பழகியுள்ளார். குதிரைகள் மீது ரூபாவுக்கு ஆர்வம் வந்ததும் அங்கிருந்து தான். 

அதே நேரத்தில் அவரது அப்பா நர்பத் சிங், சென்னையில் குதிரையேற்ற ஜாக்கியாகவும், பயிற்சியாளராவும் இருந்துள்ளார். அது ரூபாவின் ஆர்வத்திற்கு வலு சேர்த்துள்ளது. அதன் மூலம் சிறு வயதிலேயே குதிரையிலேறி சவாரி செய்ய ஆரம்பித்துள்ளார். 

ஒரு கட்டத்தில் தொழில் முறை ஜாக்கியாக குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்துள்ளார். அந்த முடிவுக்கு பிறகு அவரை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். அதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி பாய்ந்துள்ளார். 

அவர் விரும்பியதை போலவே குதிரையேற்ற பயிற்சியில் நன்கு பழகிய பிறகு இந்தியா சார்பில் வெளிநாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் ரூபா. அதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஜாக்கி என்ற அந்தஸ்த்தை எட்டினார்.

போலந்து, ஜெர்மனி என குதிரையேற்ற போட்டிகள் அதிக அளவில் நடத்தப்படும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளுக்கு சென்று ரூபா வெற்றி வாகை சூடியுள்ளார். அவரது குதிரையேற்ற கெரியரில் உள்நாடு, வெளிநாடு என நூற்றுக்கணக்கான ரேஸ்களையும், பல சாம்பியன்ஷிப் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். தற்போது குதிரையேற்ற பயிற்சியாளராக பலருக்கு பயிற்சி கொடுத்து வருகிறார் ரூபா. 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது இல்லை. அனைவரும் சமம் என்ற உணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளையும் பெற்றோர்கள் விளையாட்டு பயிற்சி கூடங்களுக்கு அனுப்புவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த சமூக மாற்றத்திற்கான காரணிகளில் ஒருவர் ரூபா சிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com