ருதுராஜ் ஆமைவேக அரைசதம்: குஜராத்திற்கு எதிராக 133 ரன்களை மட்டுமே குவித்த சிஎஸ்கே!

ருதுராஜ் ஆமைவேக அரைசதம்: குஜராத்திற்கு எதிராக 133 ரன்களை மட்டுமே குவித்த சிஎஸ்கே!
ருதுராஜ் ஆமைவேக அரைசதம்: குஜராத்திற்கு எதிராக 133 ரன்களை மட்டுமே குவித்த சிஎஸ்கே!

ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசனின் ஆமைவேக ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 133 ரன்களை மட்டுமே குவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஓப்பனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

மிக நிதான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்தியதால் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. ஆனால் ஆட்டம் சூடு பிடிக்கும் முன்பே ஷமியிடம் சிக்கி கான்வே அவுட்டாகி நடையைக் கட்டினார். அடுத்து வந்த மொயின் அலியும் நிதான ஆட்டத்தையே கடைபிடித்தார். யாஷ் தயாள் வீசிய 5வது ஓவரில் சென்னை அணியின் முதல் பவுண்டரியை விளாசினார் ருதுராஜ். அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரிகளை மொயின் அலி விளாசியதால் ஸ்கோர் டாப் கியரில் உயரத் துவங்கியது.

ரஷித் கான் வீசிய 6வது ஓவரில் தொடர்ந்து இரு சிக்ஸர்களை விளாசியதால் பவர்பிளே முடிவில் 47-1 என்ற அருமையான ஸ்கோரை எட்டியது சென்னை அணி. ஆனால் சென்னையின் வேகத்திற்கு அல்சாரி ஜோசப்பும் ரஷீத் கானும் ஸ்பீட் பிரேக்கர் போட்டனர். பவுண்டரி அடிக்கவிடாமல் ரஷீத் கான் மிக நெருக்கடியாக பந்துவீசி அழுத்தத்தை ஏற்படுத்தினார். இந்த அழுத்தத்தில் சாய் கிஷோர் பந்துவீச்சில் அவுட்டானார் மொயின் அலி.

அடுத்து வந்த ஜெகதீசன் கெய்க்வாட் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை தொடர்ந்ததால் ஸ்கோர் மீண்டும் மந்தமாக உயரத் துவங்கியது. மிக பொறுமையாக விளையாடிய ருதுராஜ் 44 பந்துகளில் அரைசதம் விளாசினார். அடுத்த ஓவரில் ரஷீத் கானிடம் அவுட்டாகி வெளியேறினார் ருதுராஜ். அடுத்து வந்த ஷிவம் துபே ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆனதால் சென்னை அணி மிக முக்கியமான டெத் ஓவர்களில் நெருக்கடிக்கு ஆளானது.

அடுத்து வந்த தோனியும் பொறுமையாக விளையாடி 10 பந்துகளை சந்தித்து 7 ரன்களை மட்டுமே எடுத்து ஷமி பந்துவீச்சில் வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்தது சென்னை அணி. 16 முதல் 20 ஓவர் வரையிலான டெத் ஓவர்களில் சென்னை விளாசிய பவுண்டரிகள், சிக்ஸர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம்! இதுவே சென்னையில் மந்த ஆட்டத்திற்கு ஒரு உதாரணம். தற்போது 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com