'சும்மா அதிருதுல' முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்த ரொனால்டோ !
உலக்க கால்பந்தாட்ட ரசிகர்கள் நேற்று ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருந்த போர்ச்சுகல் - ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. டிரா ஆனதால் சோகமாக இருந்த கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஒரே உற்சாக டானிக்காக இருந்தவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மட்டும்தான். ஆம் நேற்றைய போட்டியில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.
போர்ச்சுகல் அணி தனது ஏழாவது உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் பிக், செர்ஜியோ ராமோஸ், ஆன்ட்ரெஸ் இனெஸ்டா, டேவிட் சில்வா, இஸ்கோ, டீகோ கோஸ்டா உள்ளிட்ட அசத்தலான வீரர்கள் இருந்தனர். ஆனால் போர்ச்சுகல் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை பெரிதும் நம்பி இருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பொய்யாகாத வகையில் விளையாடினார் ரொனால்டோ. சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கம் முதலே போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் செய்த தவறால் கிடைத்த பெனால்டி மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை அடித்தார்.
இந்நிலையில் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டா சிறப்பான கிக் மூலம் பதில் கோலடித்தார். அப்போது 1-1 என ஸ்கோர் இருந்தது. எனினும் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியின் போது போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றிருந்தால், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.இரண்டாவது பாதி தொடங்கியதும் ஸ்பெயின் கோலடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 55-வது நிமிடத்தில் டீகோ கோஸ்டா ப்ரீ கிக் முறையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் இரண்டாவது கோலை அடித்தார்.
அதைத் தொடர்ந்து அடுத்த 58 நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் நாச்சோ அடித்த கிக் கோல் போஸ்ட்டில் பட்டு வலைக்குள் சென்றது. இதனால் போர்ச்சுகல் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் ஆபத்பாந்தவனான ரொனால்டோ 3-ஆவது கோலை அடித்தார். ரசிகர்கள் ஆர்ப்பரித்து ரொனால்டோவின் ஹாட் ட்ரிக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.