
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
3வது மற்றும் கடைசிப் போட்டி
3வது மற்றும் கடைசிப் போட்டி இன்று மத்தியப் பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இன்றையப் போட்டியிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில், ஆறுதல் வெற்றியையாவது பெறும் நோக்கில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் இந்திய அணியைப் பேட் செய்ய பணித்தது. அதற்கு முன்பு இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த இரண்டு போட்டிகளில் இடம்பிடித்து பந்துவீச்சாளர்கள் முகம்மது ஷமி, முகம்மது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதில் உம்ரான் மாலிக்கும், சாஹலும் சேர்க்கப்பட்டனர்.
பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை
இதையடுத்து தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தவுடன், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கும் விரட்டினர். அதன்படி, 24.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இருவரும் 200 ரன்களைப் பார்ட்னர்ஷிப்பில் எடுத்தனர். அது மட்டுமின்றி இந்த இணை, பார்ட்னர்ஷிப்பில் 204 ரன்களை நியூசிலாந்துக்கு எதிராக எடுத்துள்ளது.
சதமடித்து சாதனை படைத்த ரோகித்
இதற்கு முன் 2009ஆம் ஆண்டில் இந்திய இணையான சேவாக் மற்றும் காம்பீர் எடுத்த 201 ரன்களும், இலங்கை இணையர்கள் ஜெயசூர்யா மற்றும் தாரங்கே நேப்பியர் எடுத்த 201 ரன்களும் சாதனையாக இருந்தது. அதை இன்று ரோகித் மற்றும் சுப்மான் கில் இணை முறியடித்தது. அந்தச் சாதனையை முறியடித்தபடியே இருவரும் சதத்தை நோக்கி நகர்ந்தனர். அந்த வகையில் 2020 ஜனவரிக்குப் பிறகு தன்னுடைய 30வது சதத்தைப் பதிவு செய்தார்.
அவர், 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். சதத்தை நிறைவு செய்தவுடனேயே பிரேஸ்வெல் பந்துவீச்சில் வீழ்ந்தார். இன்றைய போட்டியில் அவர் சதம் அடித்ததன் மூலம் தன்மீது பலரும் வைத்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரும் இன்றைய போட்டியில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். 80-84 பந்துகளில் அதிவேக சதமடித்த வரிசையில் அவர் மூன்றுமுறை இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 84 பந்துகளில் சதமடித்த அவர், இன்று 83 பந்துகளில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்தார். இந்த வரிசையில் அவர், இங்கிலாந்துக்கு எதிராக 2018ஆம் ஆண்டு 82 பந்துகளில் சதமடித்ததே அவரது தனிப்பட்ட சாதனையாக உள்ளது. அதுபோல் ஒருநாள் போட்டிகளில் 30 சதம் கண்டவர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்துள்ளார்.
இந்த வரிசையில் மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி (46) இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (49) முதல் இடத்திலும் உள்ளனர். அவர் கடந்த போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல் இன்றைய போட்டியிலும் சுப்மன் கில்லும் சதம் அடித்திருந்தார். அவர் 78 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து டிக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தார். சுப்மன் கில்லுக்கு இது 4வது சதம்.
212 ரன்களுக்கு முதல் விக்கெட்.. ஆனால் அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்!
ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி வலுவான தொடக்கத்தை வழங்கிய போது அடுத்து வந்தவர்கள் அதனை தக்க வைக்கவில்லை. விராட் கோலி 36, இஷான் கிஷன் 17, சூர்ய குமார் யாதவ் 14 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 81 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 400 ரன்களை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சந்தேகமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவும், வாஷிங்டன் சுந்தரும் தற்போது களத்தில் உள்ளனர்.