வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்: ரோகித்துக்கு ரெஸ்ட், வருவாரா தோனி?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனி அணியில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் இந்த தொடருக்கான அணி தேர்வு இன்று நடக்கிறது. இதில், அதிக போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட உள்ளார்.
நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த தோனி, இந்த தொடரில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் அவர் வலைபயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தோனிக்கு மாற்று என தேர்வுக்குழுவால் கூறப்படும் ரிஷப் பந்த் சமீபத்திய போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் தோனி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.