ரோகித் சர்மா 50; கோலி டக் அவுட்: இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 106!
சென்னையில் நடைபெற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரை சதமடித்தார். முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகவும் எதிர்பார்ப்புடன் 2ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்ந்தெடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதல் டெஸ்ட்டில் விளையாடிய பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் நதீம் நீக்கப்பட்டு அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
ஆனால் தொடர்ந்து சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய ரோகித் சர்மா அரை சதமடித்தார். களத்தில் தொடர்ந்து நின்று சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 21 ரன்களில் ஜாக் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி மொயின் அலி பந்துவீச்சில் டக்அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.