“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்!

“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்!

“ஒருநாள் தொடரில் இதைத்தான் செய்யப்போகிறேன்” - ரோகித் திட்டவட்டம்!
Published on

நாளை முதல் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் தான் எப்படி விளையாடப்போகிறேன் என்பதை ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நோட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் பலர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியில் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழும் ரோகித் ஷர்மா, இந்தத் தொடரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறார். நடந்து முடிந்த டி20 தொடரின் இறுதிப் போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு அவர் வழிவகுத்தார். வெற்றி பெற்ற பின்னர் பேசியிருந்த அவர், “நான் எனது தனிப்பட்ட ஆட்டத்தை நிரூபிக்க விளையாடவில்லை. அணியின் வெற்றிக்காகவே விளையாடினேன். ஏனென்றால் இது இறுதிப்போட்டி. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை என்பதால் நான் அணியின் வெற்றிக்காக மட்டும் விளையாடினேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை முதல் நடைபெறவுள்ள ஒருநாள் தொடர் குறித்து பேசியுள்ள ரோகித், “இந்தத் தொடரை நான் தொடக்கம் முதலே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி விளையாடப்போகிறேன். ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு நான் பெரிதளவில் கிரிக்கெட் விளையாடவில்லை. எனவே இந்த ஒருநாள் தொடரில் தொடக்கம் முதலே கவனத்துடன் விளையாடி நான் மீண்டும் பேட்டிங்கில் சிறந்த நிலையை அடைய நினைக்கின்றேன். அதை முடிந்த வரை சிக்கிரம் செய்ய முயற்சிப்பேன். இதைத்தான் நான் வரும் தொடரில் செய்யப்போகிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com