டி20-யிலும் 200 ரன் அடிக்க நினைத்தேனா? ரோகித் சர்மா பேட்டி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஒவர் கிரிக்கெட் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, 35 பந்துகளில் சதம்அடித்தார். அவர் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரின் சாதனையை சமன் செய்தார். கே.எல்.ராகுல் 89 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.
261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 17 புள்ளி 2 ஒவர்களில் 172 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தது. ரோகித் சர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
பின்னர் அவர் கூறும்போது, ’இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. அதனால் எளிதாக அடித்து ஆட முடிந்தது. வழக்கமாக எப்படி ஆடுவேனோ, அப்படித்தான் ஆடினேன். நான் பின்பற்றுகிற பேட்டிங் முறை என்பது ஒரே மாதிரியானதுதான். அதை சிறப்பாக தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்தப் போட்டியில் 200 ரன் அடிக்க வேண்டும் என்று நினைத்தீர்களா என்று கேட்கிறார்கள். இது கொஞ்சம் டூமச்-சான கேள்விதான். அப்படியொரு எண்ணமில்லை. ஆனால் எவ்வளவு ரன் குவிக்க முடியுமோ, அவ்வளவு குவிக்க வேண்டும் என்று நினைத்து ஆடினேன். அதற்கு பலன் கிடைத்தது. அதே போல இலங்கையும் சரியான சவாலை கொடுத்தது. அவர்களும் சரியாகவே சேஸிங்கை தொடங்கினார்கள். ஆனால் ஆட்டத்தின் போக்கை மாற்றியது குல்தீப் யாதவ்தான். அவரும் சேஹலும் சரியாக நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கு வழி வகுத்தது. கே.எல்.ராகுலும் சிறப்பாக ஆடினார். அவர் ஆடுவதை எதிர்முனையில் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன்’ என்றார்.

