கேப்டனாக, பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் ரோகித் சர்மா
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 158 ரன்கள் அடித்து, பின்னர் விளையாடிய இந்திய அணி 18.5 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது. ரோகித் 50, தவான் 31 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பண்ட் 40, தோனி 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்துவீச்சில் குர்ணால் பாண்யா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். இந்திய அணி தனது முதல் டி20 வெற்றியை நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆகியுள்ளது. கடந்த போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, இன்று அதற்கு பதிலடி கொடுத்துள்ளது.
அதிக ரன்கள் குவித்த ரோகித்
இந்தப் போட்டியில் 50 ரன்கள் அடித்த ரோகித் சர்மா டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் 2,288 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். 2,272 ரன்களுடன் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். சோயிப் மாலிக் 2,263, விராட் கோலி 2,167, பிரண்டன் மெக்கல்லாம் 2,140 ரன்களுடன் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.
100 சிக்ஸர்கள்
இன்றையப் போட்டியில் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம், டி20 போட்டியில் 100 சிக்ஸர்களை கடந்துள்ளார். இதுவரை மொத்தம் 102 சிக்ஸர்கள் அடித்து, குப்தில் அடித்ததை சமன் செய்து இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 103 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். இன்றுடன் சேர்த்து மொத்தம் 16 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதேபோல், 4 சதங்கள் அடித்துள்ளார்.
அதிக வெற்றிகள் குவித்த கேப்டன்
இந்திய அணியில் டி20 போட்டிகளை பொறுத்தவரை ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக விளங்கி வருகிறார். மொத்தம் 14 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ள அவர், அதில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், 20 போட்டிகளில் கேப்டனாக இருந்தே விராட் கோலி 12 வெற்றிகளை பதிவு செய்தார். இதற்கு முன்பாக, மைக்கேல் கிளார்க், சர்ஃப்ராஸ் அகமது ஆகியோர் 14 போட்டிகளில் 12இல் வெற்றியை பெற்று தந்துள்ளனர்.
சச்சினும், ரோகித் சர்மாவும்
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 15,921, ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களுடன் சச்சின் டெண்டுகள் முதலில் இடத்தை இன்றளவும் தக்க வைத்துள்ளார். அந்த வரிசையில் மற்றொரு இந்திய வீரரான ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 2288 ரன்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அனைத்து பிரிவு போட்டிகளிலும் இந்திய வீரர்களே முதல் இடத்தில் உள்ளனர்.
அதேபோல் அதிக சதம் அடித்தவர்களில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 51, ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களுடன் சச்சின் முதல் இடத்தில் உள்ளார். அந்தவரிசையில் டி20 போட்டிகளில் ரோகித் 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.