
உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மென் ரன் சராசரியை ரோகித் ஷர்மா சமன் செய்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா மற்றும் மாயங்க் அகர்வால் களமிறங்கினர். இவர்கள் இருவரும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் குவித்திருந்தது.
ரோகித் ஷர்மா 115 ரன்களுடனும் மாயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் ஷர்மா சதம் விளாசினார். இதன்மூலம் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். அத்துடன் ரோகித் ஷர்மா தற்போது வரை இந்தியாவில் விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸில் 884 ரன்களை சேர்த்துள்ளார். இதனை 98.22 என்ற சராசரியுடன் அடித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் டான் பிராட்மென் வைத்திருந்த சராசரியான 98.22-ஐ இவர் சமம் செய்துள்ளார்.
எனினும் டான் பிராட்மென் ஆஸ்திரேலியாவில் 50 இன்னிங்ஸில் விளையாடி 4322 ரன்களை அடித்துள்ளார். ஆகவே தற்போது வரை ரோகித் ஷர்மா அந்தச் சராசரியை சமன் செய்திருந்தாலும், இந்தியாவில் அதிக இன்னிங்ஸ் விளையாடும் போது இதனை தக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.