பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா முன்னேற்றம்
இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோகித் சர்மா முன்னேறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த போதும், அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது. மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். விசாகப்பட்டித்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும், குல்தீப் யாதவ், சாஹல் ஆகிய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக விளையாடினர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா 816 புள்ளிகளுடன் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக அவர் 7வது இடத்தில் இருந்தார். இரண்டாவது போட்டியில் அரைசதம், மூன்றாவது போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான் 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்த தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 23 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் 16 இடங்கள் முன்னேறி 56-வது இடத்தை எட்டியுள்ளார்.