சதம் விளாசினார் ஹிட்மேன் ரோகித் ! பந்து வீச்சில் பதுங்கிய பங்களாதேஷ்
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக 104 ரன்களில் சவும்யா சர்கார் பந்துவீச்சில் அவுட்டானார்.
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இவ்விருவரும் அரை சதம் அடித்து தொடர்ந்து பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை சிதறடித்து வருகின்றனர்.
உலகக் கோப்பைத் தொடரில், இன்று நடக்கும் 40 வது லீக் போட்டியில், இந்தியா -பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வியாக அந்தப் போட்டி அமைந்துவிட்டது. அதை சரிகட்ட இன்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடும். இன்று வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.
இந்திய அணி 29.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளனர். ரோகித் சர்மா 104 (அவுட்) , கே.எல். ராகுல் 71 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் அடித்த பந்தை தமீம் இக்பால் கேட்ச் பிடிக்க தவறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒற்றைத் தவறு ரோகித் சர்மாவை சதம் எடுக்கும் வரை சென்றுள்ளது.