நேற்றைய போட்டியில் தனது சிக்சரால் பந்து பட்ட ரசிகைக்கு ரோகித் சர்மா தொப்பியை பரிசளித்துள்ளார்.
நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் போட்டியில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது 26 சதத்தை பதிவு செய்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 314 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியின் போது ரோகித் ஷர்மா 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசினார். இந்த சிக்சர்களில் ஒரு சிக்சர் அடித்த போது பந்து மீனா என்ற ரசிகை மீது பட்டது. எனினும் அவருக்கு காயம் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து போட்டி முடிவடைந்த பிறகு இந்திய வீரர் ரோகித் சர்மா மீனாவை சந்தித்தார்.
அப்போது ரோகித் ஷர்மா மீனாவிடம் நலம் விசாரித்தார். அத்துடன் தனது கையெழுத்து போடப்பட்ட தொப்பியையும் பரிசாக வழங்கினார். இந்தச் சம்பவம் ரசிகை மீனாவை மிகவும் மனம் நெகிழவைத்தது. மேலும் அவரும் ரோகித் ஷர்மா சிறிது நேரம் சிறிய உரையாடலும் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன்மூலம் அரை இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.