கடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்

கடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்
கடைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்

ஒரு வழியாக யோ யோ உடற்தகுதி சோதனையில் ரோகித் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஒவ்வொரு வீரருக்கும் தொடர் விளையாடுவதற்கு முன்பாக அவர்களின் உடற்தகுதியை உறுதிப்படுத்த "யோ-யோ" எனும் டெஸ்ட் வைக்கிறது. இந்த உடற்தகுதி சோதனையில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, ஒரு வீரரால் இந்திய அணிக்காக தொடரில் விளையாட முடியும்.
 
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை அண்மையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக ஓடி நல்ல மதிப்பெண்களைப் பெற்ற கோலி, தோனி, ரெய்னா உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர். ஏற்கெனவே வைக்கப்பட்ட யோ யோ டெஸ்ட்டில் அம்பத்தி ராயுடு, முகமது ஷமி ஆகியோர் தகுதி பெறவில்லை. ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக யோ யோ சோதனை நடைபெற்ற நாளில் பங்கேற்கவில்லை. அதனால், இந்தத் தொடரில் ரோகித் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

இருப்பினும், ரோகித் சர்மாவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கியது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் இன்று நடைபெற்ற யோ யோ சோதனையில் ரோகித் பங்கேற்றார். இந்தச் சோதனையில் அவர் தோற்றால் ரகானே அவருக்கு பதிலாக தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால், ஒரு பதட்டத்துடனே ரோகித் சோதனையில் பங்கேற்றார். "ஹிட் மேன்" என அன்புடன் அழைக்கப்படும் ரோகித் சர்மா 16.3 மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆவாரா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.

இந்நிலையில், ஒரு வழியாக ரோகித் சர்மா யோ யோ உடற்தகுதி சோதனையில் இன்று வெற்றி பெற்றார். இதன்மூலம், அயர்லாந்து உடனான டி20 போட்டி மற்றும் இங்கிலாந்து உடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் ஜூன் 23ம் தேதி இங்கிலாந்து செல்கிறார்கள். அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி உடனான ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com