இலங்கைக்கு எதிரானப் போட்டி: இந்தச் சாதனைகளை ரோகித் நாளை படைக்கலாம்!
இலங்கைக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில், இந்திய வீரர் ரோகித் சர்மா சில சாதனைகளை படைக்க வாய்ப்பிருக்கிறது.
உலகக் கோப்பைத் தொடரில், தனது கடைசி லீக் போட்டியில், இந்திய அணி, இலங்கையை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ரோகித் சிறப்பாக செயல்பட்டால், அவர் சில சாதனைகளை படைக்க வாய்ப்பிருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4 சதத்துடன் 544 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார் ரோகித் சர்மா. உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் மொத்தம் ஆறு சதங்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா, கடந்த 2015 மற்றும் 2019 உலகக் கோப்பையை சேர்ந்து இதுவரை 5 சதங்கள் விளாசியுள்ளார். இலங்கையின் குமார் சங்ககாராவின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார்.
இலங்கையுடன் நடக்கும் போட்டியில் அவர் சதம் அடித்தால், உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்துகொள்வார். அதோடு ஒரே தொடரில், ஐந்து சதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார்.
உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில், 11 போட்டிகளில் விளையாடி இந்த ரன்களை அவர் எட்டினார். இந்தத் தொடரில், அதை ரோகித் சர்மா தாண்டவும் வாய்ப்பிருக்கிறது.
இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா எப்போதும் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். அந்த அணிக்கு எதிராக இரண்டு முறை, இரட்டை சதம் அடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த போட்டியில், அவர் 264 ரன்கள் குவித்தார். 2017 ஆம் ஆண்டு மொகாலியில் நடந்த போட்டியில் 208 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நாளை நடக்கும் போட்டியிலும் அவர் அபாரமாக ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.