‘3வது இரட்டைசதம்’: மனைவிக்கு ரோகித்தின் கல்யாண பரிசு
இலங்கை அணிக்கு எதிராக 3-வது இரட்டை சதம் அடித்து ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான மொஹாலியில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் குவித்தார். 115 பந்துகளில் சதம் அடித்த ரோகித், அடுத்த 36 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். முதல் சதத்தில் ஒரே ஒரு சிக்ஸர் மட்டும் தான் அடித்தார். ஆனால் இரண்டாவது சதத்தில் ரோகித் 10 சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 12 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும்.
ரோகித் சர்மாவுக்கு இது மூன்றாவது இரட்டை சதம். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிராக இரட்டை சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 3-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ரோகித் படைத்துள்ளார். இதுவரை 7 இரட்டை சதங்கள் ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்டுள்ளது. அதில் மற்ற அனைவரும் ஒரு இரட்டை சதம் தான் அடித்துள்ளனர். இரட்டை சதத்திலும் அதிக ரன்(264) எடுத்தவர் என்ற சாதனையும் ரோகித் வசமே உள்ளது. அந்த இரட்டை சதமும் இலங்கைக்கு எதிராக தான் அடிக்கப்பட்டது.
கேப்டனாக இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா இன்று படைத்துள்ளார். முன்னதாக சேவாக் அடித்த 219 ரன்களும் கேப்டனாக இருந்த போது அடிக்கப்பட்டதுதான். இந்த ஆண்டி ரோகித் அடித்த 6-வது சதம் ஆகும்.
ரோகித் சர்மாவின் இன்றையை இரட்டை சதத்தில் மற்றொரு சிறப்பும் உண்டு. இன்று ரோகித் சர்மாவுக்கு திருமண நாள். 2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ரித்திகா சேஜ்தேஹ் என்பவரை மணமுடித்தார். இன்று அவருக்கு இரண்டாவது ஆண்டு திருமண நாள். மனைவி ரித்திகாவும் இன்று மைதானத்திற்கு ஆட்டத்தை காண வந்திருந்தார். ரோகித் இரட்டை சதம் அடித்ததை பார்த்து ரித்திகா கண்ணீர் மல்க மகிழ்ந்தார்.