இலங்கையில் நடக்கும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்றுள்ள முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதில் தோனிக்குப் பதிலாக ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்குகிறார்.
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இலங்கையில் நடக்கிறது. முதல் போட்டி மார்ச் 6-ம் தேதி நடக்கிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. 8 ஆம் தேதி இந்தியா- பங்களாதேஷ் அணிகளும் 10 ஆம் தேதி இலங்கை- பங்களாதேஷ், 12 ஆம் தேதி இந்தியா-இலங்கை, 14 ஆம் தேதி இந்தியா-பங்களாதேஷ், 16 ஆம் தேதி இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. 18 ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கிறது.
இந்தத் தொடரில், தென்னாப்பிரிக்கத் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி கேப்டன் விராத் கோலி, விக்கெட் கீப்பர் தோனி, ஹர்திக் பாண்ட்யா, வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்தப் போட்டிக்க் ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார். மேலும் சில இளம் வீரர்கள் களமிறங்குகிறார்.
தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டால், டெல்லியை சேர்ந்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக களமிறங்குவார். இது தொடர்பாக ரிஷப்பிடம் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவினர் பேசியுள்ளனர்.

