“நாங்கள் இந்தியர்கள்... இந்தியில் தான் பேசுவோம்' - ரசிகர்களை எரிச்சலாக்கிய ரோகித் சர்மா
நாங்கள் இந்தியர்கள் இந்தியில் தான் பேசுவோம் எனக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வளர்ந்து வரும் நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் நிதியுதவி அளிப்பவர்கள் அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்படி பல்வேறு பிரபலங்கள் கொரோனா நிதி வழங்கி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களை பொருத்தவரை சச்சின், கங்குலி, ரெய்னா, விராட்கோலி உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். அதில் ரோகித் சர்மா கொரோனா நிவாரண நிதியாக 80 லட்சம் வழங்கியுள்ளார். கிரிக்கெட்டின் மகளிர் அணியை பொருத்தவரை ரிச்சா கோஷ், பூனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு லட்சமும் மிதாலி ராஜ் 10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் தேவையான இடைவெளியைக் கொடுத்துள்ளது. அவர்கள் இந்த நேரத்தில் தங்கள் குடும்பத்தினருடன் சில விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். மேலும் முடிந்தவரை ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்துள்ளனர். அவர்களின் அரட்டையை ரசிகர்கள் ஏராளமானோர் கண்டு மிகவும் ரசித்தனர்.
அப்போது, இருவரும் தங்கள் அணி வீரர்கள் மற்றும் ஐபிஎல் பற்றி பேசினர். ரோஹித் மற்றும் பும்ரா இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுகின்றனர். நேரலையில் பேசிய இருவரும் இந்தியில் பேசியுள்ளனர்.
இதனால் ரசிகர் ஒருவர் இந்தியில் பேசுவது எங்களுக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் பேசினால் புரிந்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த ரோகித், “நாங்கள் இந்தியர்கள். இந்தியில் தான் பேசுவோம். டிவியில் வேண்டுமானால் ஆங்கிலத்தில் பேசலாம். இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மாவின் இந்தக் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

