"நாற்பது வயது வரை விளையாடுவேன்" - ரோஜர் பெடரர் நம்பிக்கை
உடல்நிலை ஒத்துழைத்து, எல்லாம் சரியாக அமைந்தால் 40 வயது வரை என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேர் செட்டில் தோற்கடித்து தனது 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ருசித்தார். இதன் மூலம் லண்டனில் நவம்பர் மாதம் நடக்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதிசுற்றுக்கு அவர் தகுதி பெற்றார். டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் பெடரர் விளையாட இருப்பது இது 15-வது முறையாகும்.
இன்னும் 3 வாரத்தில் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் பெடரர் நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை இத்தனை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதில்லை. டென்னிசை எனக்குள் அனுபவித்து விளையாடுகிறேன். உடல்தகுதியை தக்க வைத்து, பட்டங்களை ஜெயிப்பதற்காக விளையாடுவதே எனது நோக்கம். உடல்நிலை ஒத்துழைத்து, எல்லாம் சரியாக அமைந்தால் 40 வயது வரை என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.