கெத்தாக ரன்களை விளாசி தள்ளும் ராபின் உத்தப்பா! - மகிழ்ச்சியில் சிஎஸ்கே
ஐபிஎல் டி20 தொடருக்காக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் ராபின் உத்தப்பா தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தாண்டு ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கே ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அது கடந்த சில சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே தங்களது அணிக்காக எடுத்தது. 35 வயதான ராபின் உத்தப்பா கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் ஆறாவது அணி சிஎஸ்கே.
இந்தியாவுக்காக 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார் ராபின் உத்தப்பா. 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 934 ரன்களும் 6 அரை சதங்களும் அடித்தவர் உத்தப்பா. 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான டி20 அணியில் விளையாடி அசத்தியவர் ராபின் உத்தப்பா. இதுவரை 13 டி30 போட்டிகளில் 249 ரன்களை குவித்தார்.
அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கேரள அணிக்காக 5 இன்னிங்ஸில் 161 ரன்கள் எடுத்தார் உத்தப்பா. மும்பை அணிக்கு எதிராக 54 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து 213 ரன்கள் இலக்கை விரட்ட கேரள அணிக்கு உதவினார். இந்நிலையில் விஜய் ஹசாரே ஒருநாள் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் உத்தப்பா.
கேரளத்துக்காக ஒடிஷா அணிக்கு எதிராக 85 பந்துகளில் 107 ரன்களும் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக 55 பந்துகளில் 81 ரன்களும் எடுத்துள்ளார் உத்தப்பா. இதனால் உத்தப்பாவின் ஆட்டத்தினால் கேரள ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிஎஸ்கே ரசிகர்களும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இதனால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு தூணாக ராபின் உத்தப்பா இருப்பார் என பலரும் நம்புகின்றனர்.