சிஎஸ்கேவுக்கு கேதர் ஜாதவ் எப்படியோ.. அப்படிதான் ராஜஸ்தானுக்கு ராபின் உத்தப்பா!!

சிஎஸ்கேவுக்கு கேதர் ஜாதவ் எப்படியோ.. அப்படிதான் ராஜஸ்தானுக்கு ராபின் உத்தப்பா!!

சிஎஸ்கேவுக்கு கேதர் ஜாதவ் எப்படியோ.. அப்படிதான் ராஜஸ்தானுக்கு ராபின் உத்தப்பா!!

ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ராபின் உத்தப்பா தனது மோசமான ஆட்டத்தால் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரை பொருத்தவரை சஞ்சு சாம்சன், பிரித்வி ஷா, படிக்கல், திவாட்டியா, நடராஜன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் சில சீனியர் வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பியும் வருகிறார்கள். சென்னை அணியில் கேதர் ஜாதவ், வாட்சன் உள்ளிட்ட மூத்த வீரர்கள் திணறி வருகின்றனர். அந்த வகையில்தான் ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் ராபின் உத்தப்பாவும் தன்னுடைய மோசமான ஆட்டத்தால் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றார்.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பிய உத்தப்பா, பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் பட்லர் (22), ஸ்மித் (5), சாம்சன் (4) குறைந்த ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதனால் அந்த அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் இளம் வீரர் லோம்ரார் உடன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். லோம்ரார் சற்றே அடித்து விளையாட சிறிது நேரம் ஒத்துழைப்பு அளித்த உத்தப்பா, பொறுப்பற்ற முறையில் 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியும் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமே இன்றைய போட்டியில் அடித்த 17 ரன்கள்தான். இந்தப் போட்டி தொடங்கியபோது ராபின் உத்தப்பாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதை பலரும் விமர்சித்து இருந்தனர். தொடர்ந்து சொதப்பி வரும் அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். அந்த விமர்சனத்தை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் உத்தப்பா.

ஐபிஎல் தொடரில் ஒரு காலத்தில் ராபின் உத்தப்பா அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். 181 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4444 ரன்கள் எடுத்துள்ளார். 24 அரை சதம் விளாசியுள்ளார். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் சராசரியாக 350 ரன்களுக்கு மேல் குவித்து வந்துள்ளார். 2014 ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் 660 ரன்கள் குவித்து இருந்தார். அந்த தொடரில் 5 அரை சதம் அடித்து இருந்தார்.

ஆனால், இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு மிகவும் மோசமாக அமைந்துவிட்டது. ராஜஸ்தான் அணிக்காக இந்த சீசனில் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் ராபின் உத்தப்பா. சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனக்கான வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தாமல் கோட்டைவிட்டு வருகிறார். அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றே தோன்றுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com