துபாய் மண்ணில் தூள் கிளப்பிய ராபின் உத்தப்பா... அணி செய்த சிறப்பு கௌரவம்!

துபாய் மண்ணில் தூள் கிளப்பிய ராபின் உத்தப்பா... அணி செய்த சிறப்பு கௌரவம்!
துபாய் மண்ணில் தூள் கிளப்பிய ராபின் உத்தப்பா... அணி செய்த சிறப்பு கௌரவம்!

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச லீக் டி20 தொடரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ராபின் உத்தப்பா, கிரீன் பெல்ட் வாங்கி அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க பேட்டராய்க் களமிறங்கி விளையாடியவர் ராபின் உத்தப்பா. அவர், 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகள், 205 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் வெளிநாட்டு மண்ணில் விளையாடும் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் இந்திய அணியிலிருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, துபாயில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச லீக் டி20 தொடரில், துபாய் கேப்பிடல்ஸ் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இதில், நேற்று (ஜனவரி 16) நடைபெற்ற கல்ப் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உத்தப்பா, 46 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 79 ரன்கள் குவித்து அதகளப்படுத்தினார். இதற்கு முந்தைய போட்டியிலும் அவர் 33 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் அடித்த 79 ரன்கள் மூலம், அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது.

ஆனால், பின்னர் விளையாடிய கல்ப் ஜெய்ண்ட்ஸ் அணி, 19 ஓவர்களிலேயே அபார வெற்றி பெற்றது. என்றாலும், இத்தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக உத்தப்பா இருப்பதால், அவருக்கு கிரீன் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தொடரில் ‘கிரீன் பெல்ட்’ பெற்ற முதல் வீரராக ராபின் உத்தப்பா தேர்வானார்.

ILT20 தொடரில் கிரீன் பெல்ட், ஒயிட் பெல்ட், பிளாக் பெல்ட், ரெட் பெல்ட் மற்றும் ப்ளூ பெல்ட் என 5 வகை பெல்ட்கள் வழங்கப்படுகின்றன. இதில் அதிக ரன்களை எடுக்கும் வீரருக்கு கிரீன் பெல்ட்டும், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரருக்கு ஒயிட் பெல்ட்டும் பரிசாக வழங்கப்படும். அந்தவகையில், ராபின் உத்தப்பா இந்த முறை கிரீன் பெல்ட்டைக் கைப்பற்றி உள்ளார். இப்போட்டியில் இதுவரை 122 ரன்களுடன், உத்தப்பா முதலிடத்தில் உள்ளார்.

இதனாலேயே அவருடைய பேட்டிங் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். “அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து இவ்வளவு விரைவாக ஓய்வு பெற்றிருக்கக் கூடாது. அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது” என கருத்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதில் ராபின் உத்தப்பாவின் பங்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com