தவானுக்கு சரமாரி குத்து.. சாஹலின் குறும்புத்தனம் - ரிஷப் பகிர்ந்த வீடியோ !
உடற்பயிற்சியின் போது குத்துச்சண்டை பயிற்சி எடுத்த வீடியோவை கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார். பயிற்சியின் போது சாஹல் செய்யும் குறும்புத்தனம் வைரலாகி வருகிறது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கவுஹாத்தி நகரில் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை முன்னிட்டு இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சி தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வீரர்கள் குத்துச் சண்டை பயிற்சி மேற்கொள்வது தொடர்பான வீடியோ அது.
இரண்டு வீடியோக்கள் அதில் உள்ளன. முதல் வீடியோவில் உடற்பயிற்சியின் போது ஷிகர் தவானும், ரிஷப் பந்தும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்கின்றனர். இன்னொரு வீடியோவில் தவானுடன் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குத்துச் சண்டை பயிற்சி மேற்கொள்கிறார். ஆனால், இந்த வீடியோவில் குறும்புத்தனமாக ஷிகர் தவானை சாஹல் சரமாரியாக குத்துவது போன்று உள்ளது.
சிறிது நேரத்தில் ரிஷப் பந்து ஓடிவந்து தவானை பிடித்துகொள்ள, தவான் மீது சரமாரியாக குத்துவிடுகிறார் சாஹல். ஆனால், சில குத்துகள் ரிஷப் பந்துக்கும் விழுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனமான இந்த வீடியோ பலரையும் சிரிக்க வைத்துள்ளது. இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.