கிண்டல் செய்த ஆஸி.கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷாப்: வைரலாகும் வீடியோ!
தன்னை கிண்டல் செய்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன், டிம் பெய்னுக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் பதிலடி கொடுத் த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கும் இரு அணிகளும் இப்போது 3-வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளும் ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 76 ரன்னும் புஜாரா 106 ரன்னும் கேப்டன் விராத் கோலி 82 ரன்னும் எடுத்தனர். ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார். பின்னர் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ரோகித்துக்கு டென்ஷனை ஏற்படுத்தும் விதமாக பேசினார். இதன் மூலம் அவர் தவறு செய்து ஆட்டமிழப்பார் என்பது அவர் எண்ணம்.
அதன்படி, ‘’ரோகித் சிக்சர் அடித்தால் ஐபிஎல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று கலாய்த்தார். இதைக் கேட்டு அருகில் நின்ற ஆரோன் பின்ச் உள்ளிட்ட வீரர்கள் சிரித்தனர். இந்த கலாய், ஸ்டெம்ப்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்கில் தெளிவாகக் கேட்டது. பெய்னின் கலாயை கண்டுகொள்ளாமல், ரோகித் சர்மா மெதுவாக ஆடினார்.
அதோடு ரிஷாப் பன்டையும் அவர் வெறுப்பேற்றினார். ”ஒரு நாள் போட்டிக்கு தோனி வந்து விட்டார். நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் (பிக்பாஷ் அணி) க்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை. ஆஸ்திரேலிய விடுமுறையை கொஞ்சம் நீட்டித்துக் கொள். ஹோபர்ட் அழகான சிட்டி. அங்கு இவருக்கு நல்லஅபார்ட்மென்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்துச் சென்றால் என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கிண்டல் செய்தார்.இப்போது இதற்கு ரிஷாப் பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பேட்டிங் செய்துகொண்டிருக்கும் டிம் பெய்னை, ரிஷாப் கலாய்க்கிறார். அவர், ‘’நமக்கு இன்று சிறப்பு விருந்தினர் கிடைத்திருக்கிறார். மயங்க், நீங்க எப்பவாவது தற்காலி கேப்டன்’ங்கற வார்த்தையை கேள்விபட்டிருக்கீங்களா? பெய்னுக்கு பேசுவது மட்டுத்தான் பிடிக்கும். பேச்சு பேச்சு பேச்சுதான். அவரை அவுட் ஆக்க நாம் எதுவும் செய்ய வேண்டாம்’’ என்றார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்டது.