ரிஷப் பண்டின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட விபத்து: ஐபிஎல், உலகக் கோப்பையை தவற விடுகிறார்!
ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்ப கிட்டதட்ட ஒரு வருடம் வரை ஆகும் என்பதால், இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவரது கார் அதிகாலையில் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு கம்பியில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் ரிஷப் பண்ட் படுகாயத்துடன் உயிர் தப்பினார். முதல் கட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். நெற்றியில் ஏற்பட்ட காயத்துக்கு உடனடியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. கால் முட்டு மற்றும் கணுக்காலில் ரிஷப் பண்டுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட தசை நார் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பப்பட்டது. ஆனால் இன்னும் மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய எனவும் வேண்டும் எனவும் இந்த அறுவை சிகிச்சை 6 வாரங்களுக்குப் பிறகு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது காயம் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்ப கிட்டதட்ட ஒரு வருடம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய நிலைமையில் ரிஷப் பண்ட் இந்த ஆண்டில் பெரும்பாலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை. குறைந்தது 6 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டி இருக்கும். இதனால் நடப்பாண்டின் ஐ.பி.எல். தொடரை முழுமையாக தவற விடுகிறார். இதை டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநர் சவுரவ் கங்குலியும் உறுதி செய்துவிட்டார். இதனால், ரிஷப் பண்டிற்கு மாற்றாக வார்னர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளது. இவரது விக்கெட் கீப்பர் இடத்தை இங்கிலாந்து அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்டர் பிலிப் சால்ட் நிரப்புவார் எனத் தெரிகிறது. இதேபோல் அக்டோபர், நவம்பரில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.