‘இது எனது இரண்டாவது பிறந்த நாள்’ .. ரிஷப் பண்ட், மஹிமா சவுத்ரியின் நெகிழ்ச்சிப் பதிவு

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் பாலிவுட் நடிகையான மஹிமா சவுத்ரி இருவரும் தனது இன்ஸ்டா கணக்கில் இரண்டாவது பிறந்த நாள் என பதிவிட்டிருப்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Rishabh
RishabhTwitter

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருக்கு தலை, முதுகு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும் மும்பையில் உள்ள கோகிலபன் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கால் மூட்டு அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. விபத்து காரணமாக, ரிஷப் ஐபிஎல் மற்றும் இதர போட்டிகளில் விளையாடவில்லை.

Ponting and Rishab Pant
Ponting and Rishab PantPT Desk

மருத்துவமனையிலும், வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பிலும் ரிஷப் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தற்போது காயத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறார். ரிஷப் பண்ட் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழு தெரிவித்தது. இதுகுறித்து மேலும் அவர்கள், ”எதிர்பார்த்ததைவிட ரிஷப் வேகமாக உடல்நலனில் தேறி வருவதாகவும் அவருக்கு மற்றொரு அறுவைச்சிகிச்சை தேவையில்லை” எனவும் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரிஷப் வெளியிட்ட வீடியோவில், தாம் வேகமாக குணமாகி வருவதாகத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ பதிவில், வாக்கிங் ஸ்டிக் உதவியின்றி நடக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் அதில், முதலில் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்கும் அவர், திடீரென அதைத் தூக்கிப் போட்டுவிட்டு, ’இனிமேல் வாக்கிங் ஸ்டிக் தேவையில்லை’ என்றதுடன், ’ஊன்றுகோல் இல்லாதது மகிழ்ச்சியான நாள்’ என்றும் பதிவிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே வைரலானது.

Rishabh Pant
Rishabh PantInstagram

இந்த நிலையில் ரிஷப், தனது இன்ஸ்டா கணக்கில் உள்ள சுயவிவரத்தை மாற்றியிருப்பது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தனது சுயவிவரத்தில், ’இரண்டாவது பிறந்த நாள்’ எனக் குறிப்பிட்டு 05/01/2023 எனப் பதிவிட்டுள்ளார். 30ஆம் தேதி விபத்து நடந்த நிலையில், 5 நாட்கள் கழித்து 05/01/2023 என்பதை இரண்டாவது பிறந்த நாளாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, காயத்தில் இருந்து தாம் உயிர் பிழைத்த நாளைத்தான் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதே சமயத்தில் அவருடைய உண்மையான பிறந்த நாள் 04/10/1997 ஆகும்.

இதேபோல், இந்தி திரையுலக நடிகையான மஹீமா செளத்ரியும் சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். மஹீமா பேசி நடிகர் அனுபம் கேர் வெளியிட்டிருந்த வீடியோவில், “முதலில் மருத்துவர்கள் மார்பகத்தில் இருக்கும் கட்டியைப் பரிசோதித்தனர். அது சாதாரண கட்டியாகவும் இருக்கலாம் அல்லது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம் எனக் கூறி, கட்டியை அகற்றினர். அறுவைச்சிகிச்சைக்குப் பின் அது ஆரம்பநிலை கேன்சர் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் கீமோதெரபி சிகிச்சை ஆரம்பமானது. முதலில் என் குடும்பத்தினருக்குக்கூட தெரிவிக்காமல்தான் சிகிச்சைகளை மேற்கொண்டேன்.

மகள் அரியானா உடன் மஹீமா
மகள் அரியானா உடன் மஹீமா

கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டு மிகவும் உடைந்து அழுதேன். தற்போது அதனை வென்றுள்ளேன். நான் சிகிச்சையில் இருந்தபோது என் மகள் 2 மாதங்கள் வரை பள்ளிக்குச் செல்லாமல் எனக்கு உதவியாக இருந்தாள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மஹீமா செளத்ரியும் தனது இன்ஸ்டா கணக்கில், ’இரண்டாவது பிறந்த நாள்’ எனக் குறிப்பிட்டு 08/11/2022 எனப் பதிவிட்டுள்ளார். ’’புற்றுநோயில் இருந்து முற்றிலுமாக மீண்டு வந்ததை, இரண்டாவது பிறந்த நாள் என குறிப்பிட்டு இருக்கலாம்’’ என அவரது ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com